என்டியுசி: நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்தனர்

என்டியுசி: நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்தனர்

1 mins read
1192d64e-f1a0-4bc1-8b5e-afc66e6bcfda
என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங். - படம்: எஸ்பிஎச் மீடியா

2019ஆம் ஆண்டிலிருந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.

வேலைத் திறனை மேம்படுத்திக்கொண்டு பதவி உயர்வு பெறவும் தொழில்நுட்பம் காரணமா தொழில்துறை உருமாற்றம் காணும்போதிலும் மீள்திறனுடன் செயல்படவும் ஊழியர்களுக்கு இந்த நிறுனப் பயிற்சிக் குழுக்கள் உதவிக்கரம் நீட்டுவதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், என்டியுசி தலைவர் கே. தனலட்சுமி ஆகியோர் தங்கள் மே தினச் செய்தியில் ஏப்ரல் 30ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

தொழிற்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் வேலைகளிலும் வேலையிடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இருவரும் குறிப்பிட்டனர்.

இதனால் திறன் மேம்பாடு ஊழியர்களுக்கு அவசியம் என்று அவர்கள் கூறினர்.

திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் அவசியம் ஒருபுறம் இருக்க, பணவீக்கம், அதிக விலை போன்ற பல்வேறு அழுத்தங்களைச் சிங்கப்பூர் ஊழியர்கள் எதிர்கொள்வதாக திரு இங்கும் திருவாட்டி தனலட்சுமியும் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு முதல் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை இருவரும் சுட்டினர். இவ்வாண்டு செலவு, நிறுவனக் கட்டமைப்பு ஆகியவை தொடர்பாக நிறுவனங்கள் மேலும் பல மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

போட்டித்தன்மைமிக்க வேலைச் சூழலில் பலரும் சொந்த வாழ்க்கைப் பொறுப்புகளையும் வேலை தொடர்பான பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதை இருவரும் சுட்டினர்.

இத்தகையோருக்கு ஆதரவு வழங்கவும் திறன்களை மேம்படுத்தவும் என்டியுசி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்