ஆகாயப் படை முகாமுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்: 22 வயது ஆடவர் கைது

ஆகாயப் படை முகாமுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்: 22 வயது ஆடவர் கைது

2 mins read
375ab941-155a-4c3b-8d58-dde3616e4e7e
பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: தற்காப்பு அமைச்சு
Google News Preferred Icon

பாய லேபார் ஆகாயப் படை முகாமுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டவர் முழுநேர தேசியச் சேவையாளர் என்றும், அவர் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளது.

ஜனவரி 23ஆம் தேதி, இணையம் வழி அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பாய லேபார் ஆகாயப் படை முகாமில் 12 இடங்களிலும் ஆகாயப் படையின் மூத்த அதிகாரிகள் வாகனங்களிலும் குண்டு வெடிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த மிரட்டலில் பதிவிடப்பட்டிருந்தது.

அதன் தொடர்பில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அது போலியான மிரட்டல் என்றும் உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் தனியாக இச்செயலில் ஈடுபட்டதாகத் தற்காப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு குறித்த இத்தகைய அச்சுறுத்தல்களை ஆயுதப்படை மிகவும் கடுமையாகக் கையாளும் என்றும், இத்தகைய புரளிகளைப் பரப்புபவர்கள் மீது சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்காப்பு அமைச்சு சொன்னது.

அந்த ஆடவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுகளின் முழுவிவரங்கள் தெரியவரும்.

போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
வெடிகுண்டு மிரட்டல்சிங்கப்பூர்கைது