மசேநி கழகத்தின் புதிய தன்னார்வலர் மேலாண்மைக் குழு

மசேநி கழகத்தின் புதிய தன்னார்வலர் மேலாண்மைக் குழு

2 mins read
9a84e964-1503-4cf1-b398-5d9699d65f68
மேரியட் டாங் பிளாசா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற ‘சமூகத்திற்குத் திரும்பக் கொடுத்தல்’ இயக்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங். - படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

மத்திய சேம நிதிக் கழகம் (மசேநி) , அதன், ‘சமூகத்திற்குத் திரும்பக் கொடுத்தல்’ (Community Paying it Forward) இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடிய நிலையில், புதிய தொண்டூழியர் நிர்வாகக் குழுவை அமைத்துள்ளது.

கூடுதலானோரைச் சென்றடைதல், பயிற்சி, ஈடுபாடு உள்ளிட்ட அம்சங்களில் இக்குழு கவனம் செலுத்தும். கடந்த 2021 முதல் தொண்டூழியராகச் செயல்படும் சோ சின் ஹெங் தலைமையில், மேலும் ஆறு பேருடன் இந்தக் குழு செயல்படும்.

ஓய்வுக்காலத்திற்குத் தயார்செய்துகொள்ள மசேநிதி குறித்து பொதுமக்கள் நன்கு புரிந்துகொண்டு, பயன்படுத்திக்கொள்ள உதவுவதில் கழகத்துடன் இக்குழு இணைந்து செயல்படும்.

முழுவதுமாகத் தொண்டூழியர்களை மட்டுமே உள்ளடக்கிய இக்குழுவில் மூன்று துணைக்குழுக்கள் இருக்கும்.

முதல் துணைக்குழு தொண்டூழியர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவதிலும், மக்களைச் சென்றடையும் முயற்சிகளிலும் கவனம் செலுத்தும்.

இரண்டாவது துணைக்குழு, பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதிலும், மூன்றாவது குழு சமூகத்திற்குள் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதற்கான ஈடுபாட்டு முயற்சிகளிலும் கவனம் செலுத்தும்.

ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, இயக்கத்தின் ஐந்தாமாண்டு நிறைவையும், சக சிங்கப்பூரர்களின் பணி ஓய்வுக்காலத் திட்டமிடல் பயணத்தை வழிநடத்தத் தங்களை அர்ப்பணித்த தொண்டூழியர்களையும் கொண்டாடும் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இக்குழுவை அறிவித்ததுடன், “நாட்டின் முன்னுரிமைகளுள் ஒன்றான, போதுமான நிதியுடன் சிங்கப்பூரர்கள் ஓய்வு பெறுவதற்குத் தொண்டூழியர்களின் பங்களிப்பு ஆதரவளிக்கிறது,” என்றார்.

தொடர்ந்து, இத்திட்டத்தின்மூலம் 73,000க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொண்டதையும் 80,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆதரவளித்ததையும் அவர் சுட்டினார்.

கடந்த ஆண்டில் 2000க்கும் மேற்பட்டோர் தொண்டூழியர்களாகச் செயல்பட்ட நிலையில், சிறப்பாகச் செயல்பட்டோர்க்கு, உன்னதத் தொண்டூழியம் (Volunteer Excellence), சேவை நிலைய நட்சத்திர விருது (Service Centre Star Award) ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.

அண்மையில் தோ பாயோவில் இந்தியச் சமூகத்தினருக்காக, மத்திய சேம நிதி குறித்த விழிப்புணர்வு அங்கத்தை வழிநடத்தியதாகவும், மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாகவும் கூறினார் சர்வே‌ஷ் மல்ஹோத்ரா.
அண்மையில் தோ பாயோவில் இந்தியச் சமூகத்தினருக்காக, மத்திய சேம நிதி குறித்த விழிப்புணர்வு அங்கத்தை வழிநடத்தியதாகவும், மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாகவும் கூறினார் சர்வே‌ஷ் மல்ஹோத்ரா. - படம்: சாவ்பாவ்

நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டூழியரான சர்வே‌ஷ் மல்ஹோத்ரா, 67, “இந்தியச் சமூகத்தில் மசேநி குறித்துக் கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அவரவர் தேவைக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்க அனுபவம் மிக்க தொண்டூழியர்கள் பலர் உள்ளனர். அவர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

தாம் பணியாற்றிய காலத்திலிருந்தே மத்திய சேம நிதி குறித்த விழிப்புணர்வு இருந்ததாகவும் ஓய்வுபெற்ற பிறகு, தமக்குத் தெரிந்ததை அனைவருக்கும் பகிரும் பணியில் ஈடுபடுவதாகவும் அவர் சொன்னார்.

தம்மிடம் பேசிய பிறகு தெளிவு ஏற்பட்டதாகப் பலரும் கூறியது நிறைவளிப்பதாகவும் தொடர்ந்து கூடுதலானோர்க்கு உதவுவதே தமது இலக்கு என்றும் தெரிவித்தார் சர்வே‌ஷ்.

குறிப்புச் சொற்கள்