சாங்கி விமான நிலையத்தில் முனையத்திற்கு அப்பால் நிறுத்தப்படும் விமானங்களுக்கான புதிய கட்டடம்

சாங்கி விமான நிலையத்தில் முனையத்திற்கு அப்பால் நிறுத்தப்படும் விமானங்களுக்கான புதிய கட்டடம்

2 mins read
7f6c16aa-dbc5-45bd-926b-f4174d0afce2
இரு அடுக்குக் கொண்ட ஏர்பஸ் ஏ380, போயிங் பி747 ரக பெரிய விமானங்களைத் தவிர, மற்ற அனைத்து ரக விமானங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தப் புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் முனையங்களிலிருந்து தொலைவில் நிறுத்தப்படும் விமானங்களுக்கு எனக் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய கட்டடம் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது.

முனையம் இரண்டிலிருந்து பேருந்து மூலம் 5 முதல் 7 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தொலைவில் அமைந்துள்ள அந்தக் கட்டடம், 60 மீட்டர் நீளமுள்ள சாய்வுத் தளத்தைக் கொண்டுள்ளது.

சக்கர நாற்காலிகள், குழந்தை தள்ளுவண்டிகள், கையடக்க உருளைப் பைகள் ஆகியவற்றுடன் வரும் பயணிகள் எளிதாகச் சென்றுவர அது துணைபுரியும்.

அக்கட்டடத்தின் மேல் தளத்தில் இரு பயணிகள் இணைப்புப் பாலங்கள் உள்ளன.

இரு அடுக்குக் கொண்ட ஏர்பஸ் ஏ380, போயிங் பி747 ரக பெரிய விமானங்களைத் தவிர, மற்ற அனைத்து ரக விமானங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதியக் கட்டடம் பயணிகளுக்குத் தடையற்ற, வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற பயணிகள் நடமாட்டப் பாவனைப் பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியது.

சாங்கி விமான நிலையத்தில் நாள்தோறும் இயக்கப்படும் மொத்த விமானங்களில் கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு (20 விமானங்கள்) மட்டுமே முனையங்களிடமிருந்து தொலைவிலுள்ள தரைத்தள நிறுத்தங்களைப் பயன்படுத்துகின்றன.

மற்ற 98 விழுக்காடு விமானங்கள், பயணிகள் இணைப்புப் பாலம் மூலம் நேரடியாக முனையக் கட்டடத்துடன் இணையும் 111 முதன்மையான வாயில்களையே பயன்படுத்துகின்றன.

விமானப் பயண அட்டவணைத் தரவுகளின்படி, ஸ்கூட், சியாமென் ஏர்லைன்ஸ், நியூ கலிடோனியாவின் ஏர்காலின் ஆகிய மூன்று விமானச் சேவைகளுக்கு மட்டுமே பெரும்பாலும் அத்தகைய தரைத்தள நிறுத்தங்கள் ஒதுக்கப்படுவதாகவும் அது சொன்னது.

இதனால், அந்த விமானச் சேவையை நாடும் பயணிகள் மட்டுமே இந்தப் புதிய சேவையை அதிகம் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்