உரிமத்தை இழந்த பின்னரும் வாகனம் ஓட்டும் குற்றத்துக்குப் புதிய தண்டனை வரம்பு

உரிமத்தை இழந்த பின்னரும் வாகனம் ஓட்டும் குற்றத்துக்குப் புதிய தண்டனை வரம்பு

2 mins read
76aa2ec8-3451-47c0-bd47-868254c497aa
ஓட்டுநர் உரிமத்தை இழந்தவரும் உரிமமே பெறாதவரும் ஏற்படுத்தும் போக்குவரத்து குற்றம் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை இழந்த பின்னரும் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனை வரம்பை உயர் நீதிமன்றம் அண்மையில் உயர்த்தி உள்ளது.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் வாகனம் ஓட்டியதாக 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஆடவர் ஒருவரின் வழக்கு விசாரணையின்போது இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது.

2018 ஜூனில் உயிரைப் பறித்த ஒரு விபத்துக்குப் பின்னர் கேரிக் எங் குவான் மெங் என்னும் 46 வயது ஆடவருக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், தடையை மீறி அவர் வாகனம் ஓட்டியது பின்னர் தெரியவந்தது. 2024 அக்டோபரில் கைப்பேசியைப் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியபோது காவல்துறையினர் அவரை இடைமறித்து ஓட்டுநர் உரிமத்தைச் சோதித்தபோது, அவர் தடையில் இருந்தது தெரியவந்தது.

அதற்காக, 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு $5,000 அபராதமும் ஈராண்டு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தத் தண்டனை போதாது என்றும் நான்கு வார சிறை விதிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, உரிமம் இல்லாத ஓட்டுநர்களின் வெவ்வேறு வகைகளைத் தெளிவுபடுத்தும் விதமாக மே 26ஆம் தேதி திரு மேனன் எழுத்துபூர்வ காரணங்களை வெளியிட்டார்.

முன்பு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்து, பின்னர் அதை முழுமையாக இழந்த ஓட்டுநர் ஒருவர், உரிமமே பெறாத ஓட்டுநரைவிட அதிகக் குற்றப் பொறுப்புடையவர் என்று அதில் அவர் குறிப்பிட்டார்.

“அந்த ஆடவர் வாகனம் ஓட்ட இயலாத நிலை என்பது, அவரது உரிமத்தை முழுமையாக ரத்து செய்யுமளவிற்குத் தீவிரமான முன்னைய நடத்தையின் விளைவாகும்.

“அப்படியிருந்தும் அவர் வாகனம் ஓட்ட எடுத்த முடிவு, சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களின பாதுகாப்பு மீது அவர் கொண்டுள்ள தொடர்ச்சியான அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனை வரம்புகளை நீதிமன்றங்கள், முன்மாதிரிகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் திரு மேனன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்துஉயர் நீதிமன்றம்தண்டனை