சிங்கப்பூரின் தென்கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய இளையர்களுக்கு இலவச காற்பந்து, கல்விப் பயிற்சியை வழங்கும் புதிய திட்டம் 2026 நடுப்பகுதியில் தொடங்கப்படவுள்ளது.
காற்பந்தைத் தளமாகக் கொண்டு இளையர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் திறன்களை வளர்க்கவும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வித் தேவைகளுக்கு ஏற்ப முழுமையான ஆதரவை வழங்கும் நோக்கத்திலும் தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் இதற்கு ஏற்பாடு செய்கிறது.
இதனை முன்னிட்டு, தென்கிழக்கு வட்டாரத்தின் முதலாவது காற்பந்துப் பயிலரங்கு (Football Clinic @ South East) சனிக்கிழமை (டிசம்பர் 13) பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளியில் நடந்தேறியது.
இந்த நிகழ்ச்சியில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்றனர்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான தினேஷ் வாசு தாஸ் நிகழ்ச்சியில் இளையர்களுடன் கலந்துரையாடினார்.
ஒழுக்கம், மீள்திறன், குழுப்பணி ஆகியவற்றை வளர்க்க காற்பந்து உதவுகிறது என்றும் இந்தப் பண்புகள் வகுப்பறையிலும் மிக முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.
கல்வியில் சிரமங்களை எதிர்கொள்ளும் அல்லது குடும்பச் சூழலில் பல சவால்களைச் சந்திக்கும் இளையர்களுக்கு ஆதரவளிக்கும் நீண்டகாலத் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு தினேஷ் கூறினார்.
“காற்பந்துப் பயிற்சியுடன் ஆரம்பித்தாலும், இதன் இறுதி இலக்கு கல்விப் பயிற்சியை நோக்கி நகர்வதுதான்.
தொடர்புடைய செய்திகள்
“இளையர்களை விளையாட்டின் மூலம் ஒன்றிணைத்து, அவர்களுக்குள் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளர்த்து, சிறந்த கல்விச் சாதனையை நோக்கிய பாதையை உருவாக்குவதே எங்கள் எண்ணம்,” என்றார் அவர்.
ஒரு சிறிய குழுவுடன் தொடங்கி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதில் மிகவும் ஆழமாகக் கவனம் செலுத்துவது தங்களது அணுகுமுறை என்று குறிப்பிட்ட திரு தினேஷ், அந்தச் சவால்கள் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கலாம் என்றும் மேலும் பல்வேறு பங்காளிகளின் உதவி தேவைப்படலாம் என்றும் கூறினார்.
இந்தப் பயிலரங்கு எல்ட்ராகோ இன்டர்நேஷனல் குழுமம், போஸஸ் யுனைடெட் ஆகியவற்றின் நிதியுதவியுடனும் ஆதரவுடனும் நடத்தப்பட்டது.
முன்னாள் தேசியக் காற்பந்து வீரர் ஃபாண்டி அகமது உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் காற்பந்து நுட்பங்கள், தொடக்கப் பயிற்சிகள், போட்டிகள் மூலம் இளையர்களுக்கு வழிகாட்டினார்.
மூன்று மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியின் இறுதியில் இளையர்களிடம் பேசிய திரு ஃபாண்டி, காற்பந்தை ஒரு தொழிலாக விளையாட திட்டமிட்டாலும், நன்றாக உறங்கி, படிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று அவர்களை வலியுறுத்தினார்.
பிடோக் கிரீன் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் ஈஸ்வர் கார்த்திகன், 12, பயிலரங்கின்வழி புதிய நண்பர்களைப் பெற்றதாகக் கூறினார்.
“நான் தவறு செய்தபோது, பயிற்சியாளர்கள் திட்டாமல், எப்படி முன்னேறுவது என்று எனக்குக் காட்டி ஊக்கப்படுத்தினார்கள். திரு ஃபாண்டியை சந்தித்து அவருடன் விளையாடியதுடன், எனது சட்டையில் அவரின் கையெழுத்தைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் அவர்.
அடுத்த ஆண்டு உயர்நிலைப்பள்ளி படிப்பை மேற்கொள்ளவிருக்கும் ஈஸ்வர், காற்பந்துக்கும் தமது படிப்புக்கும் இடையில் பல்வேறு தொடர்புகள் இருப்பதாகக் கூறினார்.
“காற்பந்தில் கோல் அடிக்கத் தவறவிட்டால் மீண்டும் முயற்சி செய்வோம், அல்லவா? அதேபோல், படிப்பிலும் ஒரு கேள்வி புரியவில்லை என்றால், மீண்டும் படித்து அதற்கான பதில் கிடைக்கும் வரை முயற்சிசெய்து கொண்டே இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், பங்கேற்பாளர்களின் வலுவான அடித்தளத்தை உருவாக்க இன்னும் அதிகமான காற்பந்துப் பயிலரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதே நேரம், பள்ளிகள், சமூக சேவை முகமைகள், கல்வி வழங்குநர்களுடன் இணைந்து, கல்விப் பயிற்சி, வழிகாட்டுதல், பண்புநல வளர்ச்சி ஆகியவற்றை ஒன்றிணைத்து இளையர்களுக்கு வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

