ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப் பாதை ரயில்கள் அறிமுகம்

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப் பாதை ரயில்கள் அறிமுகம்

2 mins read
c68e10a8-23ed-416f-8c52-46deb1f8558b
மஞ்சள் நிறமா ஆரஞ்சு நிறமா என்ற நீடித்த யோசனை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஃபேஸ்புக்

வட்ட ரயில் பாதையில் அறிமுகம் காணும் புதிய ரயில்களுக்கு ஆரஞ்சு வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அந்த ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் - இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீடித்த யோசனைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் முடிவுகட்டி, ஆரஞ்சு நிறத்தை அறிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) முதல், புதிய நிறத்துடன் வட்டப் பாதை ரயில்கள் சேவையில் ஈடுபடும்.

பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அந்த நிறத்தையும் புதிய செயல்பாட்டு அம்சங்களையும் ஆணையம் அறிமுகம் செய்கிறது.

புதிய ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் முடிவாகி உள்ளது பற்றி ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

புதிய ஆரஞ்சு நிற வெளிப்புறத் தோற்றத்தைத் தவிர, புதிய ரயில்களின் பயணிகள் பகுதி புத்துணர்ச்சியூட்டும் வகையில் மேலும் வண்ணமயமான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

அத்துடன், மூன்று புதிய வட்ட ரயில் பாதை நிலையங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வழித்தட வரைபடங்களும் அவற்றில் இருக்கும்.

கெப்பல், கேண்டன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்களை இவ்வாண்டின் நடுப்பகுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு (ஏப்ரல் 19) முன்னதாகவே முடிக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் வட்டப் பாதை ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது.

மவுண்ட்பேட்டன், டகோட்டா, பாய லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளை வலுப்படுத்தும் பணிகள் முன்கூட்டியே முடிவடையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மார்ச் 26ஆம் தேதி தெரிவித்திருந்தது

“பராமரிப்புப் பணியில் செயல்படும் குழுக்கள் சிக்கலான செயல்முறைகளைக் கையாள நன்கு பழகிக்கொண்டனர். அதனால் வேலைகள் வேகமாக நடக்கின்றன,” என்று ஆணையம் அப்போது குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டிருந்த நான்கு இடைநிறுத்தப் பேருந்துகள் ஏப்ரல் 13 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்