தேசியச் சேவையில் மலரும் புதிய வாய்ப்புகள்

தேசியச் சேவையில் மலரும் புதிய வாய்ப்புகள்

3 mins read
15a52038-71ac-4756-b7c5-3cb47aff8113
தேசியச் சேவையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விலக்குகளின் அடிப்படையில் மூன்று வகை அடிப்படை ராணுவப் பயிற்சித் திட்டங்களில் ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியச் சேவையாளர்கள் பாதுகாப்பாக பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு உதவ, குறிப்பிட்ட மருத்துவ விலக்குகளைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறையைச் சிங்கப்பூர் 2026 ஜூன் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்துகிறது.

புதிய முறையில் உடற்செயல்பாட்டுத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தற்காப்பு அமைச்சுப் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார்.

“செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சோதனைகள் அறிமுகப்படுத்தப்படும். அதில், சேவையாளர் ஒருவர் பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் பங்களிக்கக்கூடியவரா என்பதை அவரது உடல்நிலை, செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடுவோம்,” என்று அவர் கூறினார்.

இனி, சேவையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விலக்குகளின் அடிப்படையில் மூன்று வகை அடிப்படை ராணுவப் பயிற்சித் திட்டங்களில் ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம், அவர்களுக்கு ஏற்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, மாலைக்கண் குறைபாடு கொண்ட புதிய சேவையாளர், போதுமான வெளிச்சம் உள்ள சூழலில் ‘சிக்னல் ஆப்பரேட்டராக’ (signal operator) பணியாற்ற முடியும்.

புதிய மருத்துவ வகைப்பாட்டு முறைக்கு ஏற்ப அடிப்படை ராணுவப் பயிற்சிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியில், பிஎம்டிசி (BMTC) பயிற்சி, கற்றல் மேம்பாட்டுத் துறைத் தலைவரான மேஜர் டீன் அமீர் சிங், 40, முக்கியப் பங்கு வகித்தார்.

அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தின் பயிற்சி, கற்றல் மேம்பாட்டுத் துறைத் தலைவரான மேஜர் டீன் அமீர் சிங், 40.
அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தின் பயிற்சி, கற்றல் மேம்பாட்டுத் துறைத் தலைவரான மேஜர் டீன் அமீர் சிங், 40. - படம்: தற்காப்பு அமைச்சு

பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்தபோது, எந்தச் சேவையாளரும் தமக்குத் தகுதியில்லாத அபாயகரமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்பதில் குழுவினர் உறுதியுடன் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

புதிய முறையின்கீழ், பயிற்சிகளின் மைய அம்சங்கள் பெரும்பாலும் மாறாமல் தொடரும். ஆனால் அவை தனிமனிதத் திறன், மருத்துவ நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.

இதன் மூலம், புதிய சேவையாளர்கள் தங்களின் தனிப்பட்ட மருத்துவத் திறனை கருத்தில்கொண்டு பயிற்சியில் பங்கேற்க முடியும். ஒவ்வொரு பாடத்திட்டமும் அவர்களின் மருத்துவ விலக்குகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், சேவையில் பங்களிக்கும் வாய்ப்புகள் மேலும் விரிவடையும் என்று மேஜர் டீன் கூறினார்.

தேசியச் சேவையில் சேரவிருப்போர் செய்யும் மேல்முறையீடுகளில் நான்கில் மூன்று, தங்களின் ‘பெஸ்’ (PES) தகுதி நிலையை உயர்த்தும் கோரிக்கைகளாக இருப்பதாகத் தற்காப்பு அமைச்சு தரவுகளை வழங்கியது.

அப்படிப்பட்ட ஒருவர்தான் மூன்றாம் நிலை சார்ஜண்ட் (3SG) பெஞ்சமின் மால்கம் மகாதேவன். 19 வயதான இவர், மின்னிலக்க, உளவுத்துறைப் படையின்கீழ் இயங்கும் கூட்டு உளவுத்துறைத் தலைமையகத்தில் (HQ Joint Intelligence Command) கணினி வல்லுநராகப் பணியாற்றுகிறார்.

தம் குடும்பத்தினருடன் மூன்றாம் நிலை சார்ஜண்ட் (3SG) பெஞ்சமின் மால்கம் மகாதேவன்.
தம் குடும்பத்தினருடன் மூன்றாம் நிலை சார்ஜண்ட் (3SG) பெஞ்சமின் மால்கம் மகாதேவன். - படம்: தற்காப்பு அமைச்சு

கூடைப்பந்து விளையாடும்போது ஏற்பட்ட தோள்பட்டை, முழங்கால் காயங்கள் காரணமாக ஆரம்பத்தில் அவருக்கு ‘பெஸ் பி4’ (PES B4) தகுதிநிலை வழங்கப்பட்டது.

அதனால், களப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற தமது கனவும் உடைந்துபோனதாக பெஞ்சமின் குறிப்பிட்டார். “எனினும், ‘பெஸ்’ தகுதிநிலை குறைந்தவர்கள் மீண்டும் தங்களின் தகுதியை உயர்த்தி களப்பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை எனது படையணி ஆதரித்து ஊக்கமளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது,” என்றார் அவர்.

2025 மே மாதத்தில் அவர் மேல்முறையீடு செய்து, மருத்துவத் தகுதியை ‘பெஸ் பி2’ (PES B2) நிலைக்கு வெற்றிகரமாக உயர்த்தினார். இந்த உயர்வு, அவருக்கு நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிகள் பள்ளியில் சேரும் செயல்முறையை எளிதாக்கி, விரைவுபடுத்தியது. அங்கு அவர் ‘சில்வர் பேயொனெட்’ (Silver Bayonet) விருதைப் பெற்றார்.

அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் இணைப் பேராசிரியருமான பெஞ்சமினின் தந்தையார் டாக்டர் மால்கம் மகாதேவன், 61, சவாலான பொறுப்பை ஏற்க விரும்பிய தம் மகனின் ஆர்வத்திற்கு ஆதரவளித்தார்.

“ஒரு பெற்றோராக, எங்கள் மகன்கள் நாட்டுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாட்டின் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்,” என்று அவர் சொன்னார்.

மூன்றாம் நிலை சார்ஜண்ட் (3SG) பெஞ்சமின் மால்கம் மகாதேவன் (இடது), அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான அவரது தந்தையார் டாக்டர் மால்கம் மகாதேவன்.
மூன்றாம் நிலை சார்ஜண்ட் (3SG) பெஞ்சமின் மால்கம் மகாதேவன் (இடது), அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான அவரது தந்தையார் டாக்டர் மால்கம் மகாதேவன். - படம்: தற்காப்பு அமைச்சு

புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறையை வரவேற்ற அவர், ஆரோக்கியமும், நல்வாழ்வும் காலப்போக்கில் மாறக்கூடியவை என்பதைச் சுட்டிக்காட்டினார். “நாம் அனைவரும் சில நேரங்களில் காயமடைகிறோம். குணமடைந்தபின் அவர்கள் தங்களால் முடிந்தவரை முந்தைய நிலைக்குத் திரும்ப நாம் உதவ வேண்டும்,” என்றார்.

புதிய முறை, இளையர்கள் பாதுகாப்பாகத் தங்களின் தேசியச் சேவைக் கடமைகளில் மீண்டும் இணைவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்