சிறப்புத் தேவையுடைய குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடும் வகையில், பொறியாளர்கள் பொம்மைகளின் மின்விசைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
சிங்கப்பூரின் ‘ஹோப்வொர்ட்ஸ்’ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
அவ்வகையில், வெள்ளிக்கிழமை (மே 29) 7 முதல் 18 வயது வரையிலான சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு, அவர்களின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட 70 பொம்மைகள் வழங்கப்பட்டன.
தற்காப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான ‘டிஎஸ்ஓ’ தேசிய ஆய்வுக்கூடத்தின் பொறியாளர்கள், கடந்த ஐந்து மாதங்களாகப் பணியாற்றி இந்தப் பொம்மைகளைத் தயாரித்துள்ளனர்.
பொம்மைகளின் உட்புற மின்சுற்றுப் பாகங்களை மாற்றியமைத்ததுடன், பிரத்தியேகமாக முப்பரிமாண (3டி) அச்சில் தயாரிக்கப்பட்ட நிலைமாற்றிகளையும் அவர்கள் பொருத்தியுள்ளனர். இதன் மூலம், லேசான தொடுதல் அல்லது சிறிய அளவிலான அசைவுகள் மூலமே குழந்தைகள் இந்தப் பொம்மைகளை மிக எளிதாக இயக்கி விளையாட முடியும்.
பொதுவாகக் கடைகளில் விற்கப்படும் பொம்மைகளில் உள்ள மிகச் சிறிய விசைகளை (வுசிட்ச்) அழுத்துவதற்குச் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதற்குத் தீர்வாக, சாதாரண பொம்மைகளைத் திறந்து, அவற்றின் உட்புற மின்சுற்றுகளை மாற்றி அமைத்து, அவற்றுடன் எளிதாக இயக்கக்கூடிய பெரிய மாற்றுச் சுவிட்சுகளை பொறியாளர்கள் இணைத்துள்ளனர்.
இதன் மூலம், குழந்தைகள் தங்கள் கைகளாலோ அல்லது தலையாலோ லேசாகத் தட்டினாலே அந்தப் பொம்மைகள் இயங்கத் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் பெருமூளை வாதம், தசைநார் சிதைவு போன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகள், தங்களின் கைகால்களை அதிகம் சிரமப்படுத்தாமல், இந்த எளிய சுவிட்சுகள் மூலம் பொம்மைகளைத் தாங்களாகவே இயக்கி விளையாட முடிகிறது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட பொம்மைகள் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்க பெரிதும் உதவுவதாகப் பள்ளி ஆசிரியர்களும், உடலியக்க நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
சாதாரண பொம்மைகளை விட இந்த மாற்று சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள பொம்மைகள் குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளதாகப் பெற்றோர்கள் கூறினர்.

