புதிய துடிப்பான முதுமைக்கால நிலையத்தில் 40களில் இருப்போருக்கும் வசதிகள்

புதிய துடிப்பான முதுமைக்கால நிலையத்தில் 40களில் இருப்போருக்கும் வசதிகள்

2 mins read
7bae1c7e-48d0-44c4-b7ad-d272f5544ed7
குளோ துடிப்பான முதுமைக்கால நிலையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொதுவாக துடிப்பான முதுமைக்கால நிலையங்கள் 60 வயதைத் தாண்டியோருக்கான சேவைகளை வழங்கும்.

ஆனால், ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள புதிய துடிப்பான முதுமைக்கால நிலையத்தில் சில திட்டங்கள் 40களில் இருப்போருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன. துடிப்புடன் முதுமையடைவதை முன்னரே வலியுறுத்த இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

பெளத்த சமய அறநிறுவனமான சூ-சி (Tzu-Chi), குளோ (நன்யாங்) எனும் இந்த துடிப்பான முதுமைக்கால நிலையத்தை நடத்துகிறது. இங்குள்ள ‘நீளாயுள் முற்றம்’ (Longevity Courtyard) எனப்படும் நலக்கூடத்தில் (wellness studio) மூத்தோருக்கான உடற்பயிற்சிக் கருவிகள் மட்டுமின்றி குத்துச்சண்டை இயந்திரம் போன்ற சற்று இளம் பயனர்களுக்கான வசதிகளும் உள்ளன.

மேலும், இந்த நலக்கூடத்தின் 30 விழுக்காட்டுப் பகுதி 40களில் இருப்போர் உடற்பயிற்சியில் ஈடுபடவும் அவர்களின் பெற்றோருடன் இணைந்து பழகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சூ-சியின் தற்காலிக சமூகப் பராமரிப்பு நிர்வாகி லீ வெங் ஃபூ தெரிவித்தார்.

40களில் இருப்பவர்கள் பொதுவாகத் தங்கள் பெற்றோருடன் வரும்போதுதான் இதுபோன்ற நிலையங்களில் முதன்முறையாகக் காலடி எடுத்து வைப்பர் என்ற அவர், அதுவே அவர்களுக்குத் துடிப்புடன் முதுமையடையும் வழிமுறைகளை அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தற்போது தீவு முழுவதும் 220க்கும் அதிகமான துடிப்பான முதுமைக்கால நிலையங்கள் உள்ளன.

சனிக்கிழமை (நவம்பர் 15) குளோவின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மூத்தோரின் சுகாதாரத்தைக் கவனிக்க துடிப்பான முதுமைக்கால நிலையங்கள் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். சூ-சி, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் சுகாதாரச் சேவைகளை வழங்கும் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான தேசிய பல்கலைக்கழக சுகாதார முறையுடன் இணைந்துப் பணியாற்றி வாரந்தோறும் ஒரு முறையாவது சமூக சுகாதாரக் கூடத்தை தங்கள் நிலையத்தில் நடத்தலாம் என்று திரு ஓங் அறிவுரை வழங்கினார்.

220 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள குளோ நிலையம், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 71, புளோக் 706இன் கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்