பானங்களின் விலையை என்இஏ அணுக்கமாகக் கவனிக்கும்: ஜனில்

கலன்களைத் திருப்பித் தரும் திட்டம் ஏப்ரலில் தொடக்கம்

பானங்களின் விலையை என்இஏ அணுக்கமாகக் கவனிக்கும்: ஜனில்

2 mins read
f1e24f5c-8a6c-4143-b5f0-ff96d451d296
ஏப்ரல் முதல்தேதி திட்டம் தொடங்கும்போது, பயனீட்டாளர்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் போத்தல்களையும் கலன்களையும் தீவெங்கும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட மறுசுழற்சி இயந்திரங்களில் போடலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கலன்களைத் திருப்பித் தரும் திட்டம் ஏப்ரலில் நடப்புக்கு வந்த பிறகு, தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) பானங்களின் விலையை அணுக்கமாகக் கவனிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அவர் பேசினார்.

“சதியில் ஈடுபட்டதற்கோ கொள்ளை லாபம் ஈட்டியதற்கோ ஆதாரம் ஏதும் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்ன காரணங்களால் அது நடந்தது என்பதையும் நாங்கள் ஆராய்வோம்,” என்றார் டாக்டர் ஜனில்.

கூடுதல் செலவு பயனீட்டாளர்களுக்குச் செல்வதை விலையைக் குறைக்கச் சந்தைக்குள் இடம்பெறும் போட்டி குறைக்கும் என்றார் அவர். மற்ற இடங்களில் நடப்பில் உள்ள அத்தகைய கலன்களைத் திருப்பித் தரும் திட்டங்களிலிருந்து அது தெரியவந்ததாக டாக்டர் ஜனில் சொன்னார்.

“திட்டத்தின் மூலம் எவரேனும் கூடுதலாக லாபம் ஈட்ட முயன்றால், நமது பயனீட்டாளர்கள் வாங்கும் முறையை மாற்றிக்கொள்வார்கள். இருப்பினும், பானங்களின் விலையை என்இஏ மிகவும் அணுக்கமாகக் கவனிக்கும்,” என்றார் அவர்.

கலன்களைத் திருப்பித் தரும் திட்டம், பானங்களின் விலையையும் சிறிய தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களின் வர்த்தகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்து டாக்டர் ஜனில் பேசினார்.

ஏப்ரல் முதல்தேதி திட்டம் தொடங்கும்போது, பயனீட்டாளர்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் போத்தல்களையும் கலன்களையும் தீவெங்கும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட மறுசுழற்சி இயந்திரங்களில் போடலாம்.

கலன்களைத் திருப்பித் தரும் திட்டத்தின்கீழ், 150 மில்லிலிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை உள்ள பெரும்பாலான பானங்கள் வரும்.

பயனீட்டாளர்கள் அத்தகைய கலன்களுக்குக் கூடுதலாக 10 காசு செலுத்தவேண்டியிருக்கும்.

காலிக் கலன்களைத் திருப்பித் தரும்போது அவர்கள் அந்த 10 காசைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஈஸி-லிங்க் அட்டைகளில் அது போடப்படும்.

இருப்பினும் சில சிறிய நிறுவனங்கள் பொருள்களைப் பதிவுசெய்யவும் கலன்களை அடையாளம் காண உதவும் பார்கோட் எனும் குறியீடுகளை மாற்றவும் அதிகச் செலவாகும் என்று கவலை தெரிவித்திருந்தன. கலன்களில் விற்கப்படும் பானங்களின் விலை 25 முதல் 60 காசு வரை அதிகரிக்கக்கூடும் என்று அவை அக்கறை தெரிவித்தன. அதன் பிறகு வாரியம், அவற்றுக்கு உதவும் பொருட்டுப் புதிய மானியத்தை அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தேசிய சுற்றுப்புற வாரியம்பிளாஸ்டிக்கொள்கலன்பயனீட்டாளர்