மோசடி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தேசிய அளவில் பாவனைப் பயிற்சி

மோசடி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தேசிய அளவில் பாவனைப் பயிற்சி

2 mins read
9423000f-19c5-41f2-878b-74c6e1a0a034
மோசடிகளை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்பிக்க மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பாவனைப் பயிற்சி நடத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் முதன்முறையாக மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய அளவில் பாவனைப் பயிற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது.

மோசடிகளை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்பிக்க மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அந்த பாவனைப் பயிற்சி நடத்தப்படுகிறது.

முழுமைத் தற்காப்பை முன்னிட்டு அத்தகைய பாவனைப் பயிற்சி முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

உள்துறை அமைச்சின் ஆதரவுடன் பயிற்சிகள் தொடங்குவதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தெரிவித்தது. பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் பாவனைப் பயிற்சிக்குப் பதிவுசெய்துகொள்ளலாம்.

அதில், மோசடிகள் வழக்கமாக எப்படி செயல்படுத்தப்படுகின்றன, பாதுகாப்பான சூழலில் நடத்தப்படும் பாவனைப் பயிற்சியில் மோசடியிலிருந்து எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்வது போன்றவை கற்பிக்கப்படும்.

அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்படும் மோசடிகள்மீது கவனம் செலுத்தப்படும்.

ஆறு மாதக் காலப் பாவனைப் பயிற்சியின்போது பங்கேற்பாளர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரியிடமிருந்து வருவது போன்ற அழைப்புகள் வரும்.

மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/nsse என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

இவ்வாண்டுக்கான ‘எக்செர்சைஸ் எஸ்ஜி ரெடி’ (Exercise SG Ready 2026) இயக்கத்தின் ஓர் அம்சமாகப் பாவனைப் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த இயக்கம் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை இடம்பெறும்.

நெருக்கடிகள், இடையூறுகள் ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது என்பதை சிங்கப்பூரர்கள் அறிந்துகொள்ள அந்த இயக்கம் கைகொடுக்கிறது.

இவ்வாண்டு மின்னிலக்க இடையூறுகள், நீடித்த மின்சாரத் துண்டிப்பு ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார்.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’(Our Tampines Hub) வளாகத்தில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார்.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’(Our Tampines Hub) வளாகத்தில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார். - படம்: சாவ்பாவ்

“மோசடிக்கு ஆளாகாதோர் தங்கள் விழிப்புணர்வை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள பாவனைப் பயிற்சி உதவும்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் முக்கிய தகவல் உள்கட்டமைப்பு, நுட்பமான மோசடிக்காரரால் கடந்த ஆண்டு குறிவைக்கப்பட்டதைச் சுட்டிய திருமதி டியோ, அத்தகைய மோசடிகளை எதிர்கொள்ள ஒட்டுமொத்தமாக நமது ஆயத்தநிலையை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
விழிப்புணர்வுமோசடிபாவனைப் பயிற்சி