கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுக்கும் டியோ சியோங் செங்

கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுக்கும் டியோ சியோங் செங்

2 mins read
e5e21e8c-fc9f-42cc-969e-beaac86fdea6
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் டியோ சியோங் செங் கொள்கலன் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கப்பல் போக்குவரத்துத் துறையில் முன்னணி வகிக்கும் திரு டியோ சியோங் செங், கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜூன் 8ஆம் தேதியிலிருந்தும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் பொறுப்பிலிருந்து ஜூன் 1ஆம் தேதியிலிருந்தும் திரு டியோ விடுப்பில் செல்லவிருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறை, இம்மாதம் 19ஆம் தேதி, கொள்கலன் உற்பத்தியை வேண்டுமென்றே கட்டுப்படுத்தியதாக ஏழு பேர்மீது குற்றஞ்சாட்டியது. அவர்களில் திரு டியோவும் ஒருவர்.

கொள்கலன் உற்பத்தியை அவ்வாறு கட்டுப்படுத்தியதால் 2019ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரக்குக் கப்பல் கொள்கலன்களின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பானதாக நீதித்துறை அறிக்கை வெளியிட்டது.

அதன் விளைவாக, உலகின் கொள்கலன்களை உற்பத்தி செய்யும் நான்கு ஆகப் பெரிய நிறுவனங்கள் பல நூறு மடங்கு லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 71 வயது திரு டியோ, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விடுப்பு எடுப்பதாகக் கூறினார். சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் வர்த்தக அமைப்பு ஆகியவற்றிலிருந்தும் விடுப்பு எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தம் மீது சுமத்தப்பட்ட பழியைக் கையாள்வதற்குப் போதுமான அவகாசம் தேவைப்படுவதால் பல்வேறு பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுப்பதாகத் திரு டியோ விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவருக்கான பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைவதாகக் கூறிய திரு டியோ, மீண்டும் அந்தப் பதவியை வகிக்கப்போவதில்லை என்றார்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை சம்மேளனத்தின் தலைவராகத் திரு டியோ பதவி வகித்தார்.

சம்மேளனத்தின் தலைவராகக் கடந்த ஆண்டு பதவி வகித்த திரு லிம் மிங் யான், சாங்கி விமானக் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

திரு லிம், முன்கூட்டியே சம்மேளத்தின் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டதை அடுத்து திரு டியோ மீண்டும் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்