வீடு வாசலின்றி சாலைகளில் உறங்கும் இளையர்கள் பலர்

2 mins read
e5ebba0b-5334-4bab-942c-f8d9feb25ea8
35க்குக் குறைவான வயதுடைய சிங்கப்பூரர்கள் பலர் சாலைகளில் உறங்குகின்றனர். - சித்திரிப்பு: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளம் சிங்கப்பூரர்கள் பலர் தங்குவதற்கு வீடுகளின்றிச் சாலைகளில் ‘வாழ்கின்றனர்’.

குடும்பத் தகராறு, மனத்தளவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வீடு வாங்கப் போதுமான பணம் இல்லாதது போன்றவை இதற்கான காரணங்கள்.

பொதுவாக வீடு வாசலின்றித் தவிப்போரில், வயதானவர்களைக் காட்டிலும் 35க்குக் குறைவான வயதுடையோரை அடையாளம் காண்பது சிரமமானது என்று தொண்டூழியர்களும் சமூக சேவையாளர்களும் கூறுகின்றனர். வீடு வாசலின்றித் தவிக்கும் இளையர்கள் பொதுவாகச் சாலைகளில் உறங்காதது அதற்குக் காரணம்.

ஆனால், தற்போது அவ்வாறு சாலைகளில் உறங்கும், 35க்குக் குறைவான வயதுடையோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் தொண்டூழியர்களும் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் உறங்குவோருடன் பழக வாரந்தோறும் ஆறு முறை இரவில் வெளியே செல்லும் ஹோம்லெஸ் ஹார்ட்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (Homeless Hearts of Singapore) அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் உதவி நாடும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் மாத இறுதி வரை இதன் தொடர்பில் தங்களிடம் உதவி நாடியோரில் 49.5 விழுக்காட்டினர் சாலைகளில் உறங்கும், 35க்குக் குறைவான வயதுடையோர் என்று அந்த அமைப்பினர் கூறுகின்றனர். 2022ஆம் ஆண்டு இந்த விகிதம் 37 விழுக்காடாகப் பதிவானது.

லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி 2021ஆம் ஆண்டு சாலைகளில் நடத்திய கணக்கெடுப்பில் 616 பேர் சாலைகளில் ‘வாழ்ந்து’ வந்தனர். அந்த எண்ணிக்கை 2022ல் 530க்குக் குறைந்தது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அதேபோன்ற கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

2023, 2024ஆம் ஆண்டுகளில் அத்தகைய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2021 கணக்கெடுப்பில், சாலைகளில் உறங்கியோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 50 வயதைக் கடந்தவர்களாகவும் மூன்று விழுக்காட்டினர் 30 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களாகவும் இருந்தனர்.

இந்நிலையில், வீடு வாசல் இல்லாதோருக்குக் கூரையுடன் கூடிய, பாதுகாப்பான, அமைதியாக உறங்குவதற்கான இடங்கள் (எஸ்3பிஸ்) திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இவ்வாண்டு ஜூலை மாத இறுதி நிலவரப்படி வீடு வாசலில்லாத சுமார் 100 பேர் எஸ்3பிஸ் இடங்களில் தங்கி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.

எடுத்துக்காட்டாக, பிசிஎஸ் எனப்படும் பிளெஸ் கம்யூனிட்டி சர்விசஸ் (Bless Community Services) அமைப்பு தேவாலயங்களில் எஸ்3பிஸ் இடங்களை வழங்கி வருகிறது.

மேலும், சாலைகளில் உறங்குவோர் தொடர்பில் 175 சம்பவங்கள் குறித்து ஒன்சர்விஸ் (OneService) தளங்கள் வழியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதென தேசிய வளர்ச்சி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. அத்தளங்களின் மூலம், உதவி தேவைப்படுவோரைப் பற்றிப் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்