எஸ்ஐஏ-நியூசிலாந்து விமானங்களில்அதிக இருக்கைகள்

எஸ்ஐஏ-நியூசிலாந்து விமானங்களில்அதிக இருக்கைகள்

2 mins read
361906f3-f349-445c-b43c-ffba10e7fb4c
இரு விமான நிறுவனங்களின் இருக்கைகள் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 490,000க்குக் கூடும். - படங்கள்: ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிக்சல்ஸ்

சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான விமானப் பயணங்களில் அக்டோபர் பிற்பகுதியிலிருந்து மார்ச் வரையில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையிலான விமானங்களில் அதிக இருக்கைகளை சேர்க்க சிங்கப்பூர் ஏர்லைன்சும் (எஸ்ஐஏ), நியூசிலாந்து ஏர்லைன்சும் முடிவு செய்துள்ளன.

அந்தக் காலகட்டங்களில் இருக்கைகள் 17 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று இரு நாட்டின் விமான நிறுவனங்கள் தெரிவித்தன. இதன்படி புதிதாக 72,000 இருக்கைகளைச் சேர்ப்பதால் ஒட்டுமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 490,000க்கு அதிகரிக்கும் என்று வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.

இந்த நடவடிக்கையால் விமான இணைப்பு மேலும் மேம்படும், நீக்குப்போக்கான, சிறந்த பயண வாய்ப்புகளை வழங்க முடியும் என்று இரு விமான நிறுவனங்களும் கூறின.

அக்டோபர் 25 முதல் மார்ச் 27 வரை வடக்குப் பகுதியில் குளிர்காலப் பருவமாகும்.

அக்டோபர் 26 முதல் மார்ச் 27 வரை, சிங்கப்பூருக்கும் நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கும் இடையே ஏர் நியூசிலாந்து வாரத்திற்கு நான்கு விமானச் சேவைகளை கூடுதலாக வழங்கும். தற்போது அது அன்றாடம் இரண்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது.

எஸ்ஐஏ தனது தரப்பில் ஆக்லாந்துக்கு நாள்தோறும் மூன்று சேவைகளுக்குப் பதிலாக இரண்டு விமானச் சேவைகளை வழங்கும். ஆனால் வழக்கமான இருக்கைகளைவிட இரண்டு மடங்கு அதிகமான இருக்கைகளைக் கொண்ட விமானங்களை எஸ்ஐஏ பயன்படுத்தும்.

இதற்கு முன்பு, மே 20ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் அக்டோபர் பிற்பகுதியிலிருந்து சிங்கப்பூருக்கும் கிறைஸ்ட்சர்ச்சுக்கும் இடையே வாரத்திற்கு மூன்று சேவைகள் வழங்கப்படும் என்று ஏர் நியூசிலாந்து கூறியிருந்தது.

எஸ்ஐஏயின் ஏற்கெனவே உள்ள வாரத்திற்கு 12 சேவைகள் வரையிலான கிறைஸ்ட்சர்ச் சேவைகளுடன் சேர்த்து, இந்த இரண்டு விமான நிறுவனங்களும் நவம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை வாரத்திற்கு 15 சேவைகள் வரை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்