சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்துவரும் வேளையில் மூத்தோருக்கான பராமரிப்பைப் பன்முகப்படுத்தும் வழிகள் ஆராயப்படுகின்றன.
மூத்தோர் பராமரிப்பு நிலையங்களைவிட மூத்தோருக்குக் கூடுதல் முன்னுரிமை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
மூத்தோருக்கான பகிரப்பட்ட குடியிருப்புத் திட்டத்துக்கான ஒப்புதலை அரசாங்கம் இம்மாதம் 10ஆம் தேதி வழங்கியது. அதில் பல்வேறு மூத்தோர் ஒரே வீட்டில் தங்கியிருந்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு போன்ற ஆதரவைப் பெறலாம்.
ஒரே வீட்டில் தங்கியிருக்கும் மூத்தோரைப் பராமரிப்பாளர்கள் கவனித்துக்கொள்வர்.
இத்தகைய பராமரிப்புத் திட்டம் வழக்கமான பராமரிப்பு இல்லங்களுக்கு ஒரு மாற்றுவழியாகக் கருதப்படுகிறது.
மூத்தோர் ஒரு பராமரிப்புச் சூழலிலிருந்து மற்றொன்றுக்கு விரைவாக மாறுவது அவசியம். சுகாதார அமைச்சு அந்த அம்சத்தில் கவனம் செலுத்துகிறது என்றார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
உதாரணமாக, ஒரே வட்டாரத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பராமரிப்புச் சேவைகளை வழங்குவோர் ஒன்றாக இணைந்து ஒருங்கிணைந்த சமூகப் பராமரிப்புத் திட்டத்தை அமைத்து அதன்வழி குறிப்பிட்ட அந்த வட்டாரத்தில் உள்ள மூத்தோருக்குச் சேவையாற்றலாம் என்றார் திரு ஓங்.
கூடுதலாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுகாதார அமைச்சு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள சுகாதாரத் தரவு மசோதா, சமூகச் சேவை வழங்குநர்களும் தாங்கள் பராமரிக்கும் மூத்தோர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்படி எடுத்துக்கூறுகிறது என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மூத்தோரைப் பராமரிக்க தனியார் நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களும் உள்ளன.
அவற்றுள் ஒன்று தாதிமை இல்லங்கள். அத்தகைய இல்லங்களில் தீவிர மருத்துவப் பராமரிப்புத் தேவைப்படும் மூத்தோர் பார்த்துக்கொள்ளப்படுகின்றனர். சிங்கப்பூர், பராமரிப்பு இல்லங்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை 20,000லிருந்து 2030ஆம் ஆண்டு 31,000க்கு அதிகரிக்கவிருக்கிறது.
பராமரிப்புடன் கூடிய வாழிடம் மூத்தோருக்கான மற்றொரு திட்டம். அத்தகைய குடியிருப்புகளில் மூத்தோரால் தனித்து வாழ முடியும். அவர்களுக்குக் குளித்தல், உடை மாற்றுதல் போன்ற அன்றாட வேலைகளுக்கு உதவித் தேவைப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் ஆகியோரின் துணையுடன் சொந்த வீட்டிலும் மூத்தோர் மூப்படையலாம்.

