அந்திமகால மருத்துவப் பத்திரம்: 84,000க்கும் மேற்பட்டோர் பதிவு

அந்திமகால மருத்துவப் பத்திரம்: 84,000க்கும் மேற்பட்டோர் பதிவு

2 mins read
0c207370-5efe-435e-9600-e811131e2c38
சிங்கப்பூரில் 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் சுயநினைவுடன் அந்திமகால மருத்துவப் பத்திரத்தில் கையெழுத்திடலாம். - படம்: ஐஸ்டாக்

தீராத நோயால் பாதிக்கப்பட்ட பிறகு செயற்கைச் சுவாசக் கருவிகள் போன்ற சிகிச்சைகளைத் தொடரவேண்டாம் என்று குறிப்பிடும் அந்திமகால மருத்துவப் பத்திரத்தில் (Advance Medical Directive) 84,500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகச் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்தார்..

சுயநினைவை இழந்த பிறகும் செயற்கை சிகிச்சைகளைத் தொடரவேண்டாம் என்று அந்த மருத்துவப் பத்திரம் குறிப்பிடுகின்றது.

சிங்கப்பூரில், 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் சுயநினைவுடன் அந்தச் சட்டபூர்வ ஆவணத்தில் கையெழுத்திடலாம்.

மருத்துவர்களின் முன்னிலையில் அந்த ஆவணம் கையெழுத்திடப்பட வேண்டும் என்ற நிபந்தனையைச் சுகாதார அமைச்சு அகற்றுவது குறித்து ஆலோசிக்குமா என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குவா பூன் தெங் நாடாளுமன்றத்தில் கேட்டார்.

நீண்டகால அதிகாரப் பத்திரத்துக்குப் பதிவுசெய்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, அந்திமகால மருத்துவப் பத்திரத்திற்குப் பதிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் திருவாட்டி குவா குறிப்பிட்டார்.

தற்போது, ​​ஒருவர் அந்திமகால மருத்துவப் பத்திரத்தில் கையொப்பமிடும்போது, ​​இரண்டு சாட்சிகள் உடன் இருந்து அவர்களும் அதில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளில் ஒருவர் மருத்துவராகவும், மற்றவர் குறைந்தபட்சம் 21 வயதுடையவராகவும் இருக்க வேண்டும் என்பது போன்ற பிற தகுதிகளும் உள்ளன.

இதற்குப் பதிலளித்த துணை அமைச்சர் ரஹாயு, ஒருவர் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டாலோ, சுயநினைவை இழந்தாலோ அல்லது உயிர் காக்கும் சிகிச்சை தேவைப்பட்டாலோ, தனது வாழ்நாளை நீட்டிக்க எந்த சிகிச்சையையும் பயன்படுத்த விரும்பவில்லை என்பதை அந்திமகால மருத்துவப் பத்திரம் குறிப்பிடுவதால், அதில் கையெழுத்திடும் முடிவை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

“ஆகையால், தனிநபர்களின் நலன்களைப் பாதுகாக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, உடனிருக்கும் மருத்துவர், அந்த நபர் அந்திமகால மருத்துவப் பத்திரத்தில் கையெழுத்திடுவதன்மூலம் மருத்துவ ரீதியான தாக்கங்களைப் புரிந்துகொண்டுள்ளார் என்பதையும், அவர் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதையும், மேலும் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்பதையும் உறுதிசெய்கிறார்,” என்று திருவாட்டி ரஹாயு மேலும் கூறினார்.

2010ல் இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 404,000 சிங்கப்பூர் குடிமக்கள் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்உத்தரவுபதிவு