சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்பு அமைப்புகளில் வேலை செய்யும் 23,000 பேரின் வருடாந்தரச் சம்பளம் கிட்டத்தட்ட ஏழு விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக உயர்த்தப்படவுள்ளது.
2026ஆம் ஆண்டிறுதிக்குள் புதிய சம்பள வழிகாட்டி நெறிமுறைகளைச் சுகாதார அமைச்சு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்தார்.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார்.
சம்பள உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க அமைப்புகளுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் வெள்ளியைச் சுகாதார அமைச்சு வழங்கும் என்றார் அமைச்சர் ஓங்.
வரும் மாதங்களில் புதிய சம்பள வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்ற அவர், ஆண்டிறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதால், அதற்கு முன்னரே அமைப்புகள் தேவைப்படும் திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
“இதுபோன்ற சம்பள உயர்வை வழங்குவதன்மூலம், பலரையும் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு ஈர்க்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று திரு ஓங் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஊழியர்களைத் தக்கவைக்க கடந்த ஜூலை மாதம் ஏறக்குறைய 63,000 பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் சம்பளங்கள் ஏழு விழுக்காடு உயர்த்தப்பட்டன.
பொது மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறும் நோயாளிகளுக்கு சமூகப் பராமரிப்பு அமைப்புகள் இடைக்கால, நீண்டகால சேவைகளை வழங்குகின்றன.
அத்தகைய அமைப்புகளுக்கான சம்பள வழிகாட்டிகளைச் சுகாதார அமைச்சு 2024ஆம் ஆண்டு முதல் முறையாக அறிவித்தது.
சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத் தலைவர் கே. தனலட்சுமி, சமூகப் பராமரிப்புத் துறைக்கான சம்பளங்களை மறுஆய்வு செய்ய சுகாதார அமைச்சுடன் தொழிற்சங்கம் இணைந்து செயலாற்றியது என்றார்.
“சமூகப் பராமரிப்புத் துறையில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள ஊழியர்களைப் போல் அதே வேலை பளுவை எதிர்கொள்கின்றனர்,” என்றார் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவருமான திருவாட்டி தனலட்சுமி.
அனைத்து சமூகப் பராமரிப்பு அமைப்புகளின் சம்பள வழிகாட்டியின் அளவுகோலை எட்டும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர் என்ற திருவாட்டி தனலட்சுமி, அவ்வாறு செய்வதன் மூலம் துறையில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பலனடைவர் என்றார்.

