தேசிய வளர்ச்சி அமைச்சை ஏமாற்றி கிட்டத்தட்ட $260,000 பணத்தை அபகரித்ததாக இரு நிறுவனங்களின் இயக்குநர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டான் கியா லிம், 66, சூ சியாங் வெய், 48 ஆகிய இருவர்மீதும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தலா ஒரு ஏமாற்றுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஏமாற்றும் நோக்கத்துடன் போலிப் பத்திரங்கள் தயாரித்ததாக மேலும் 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சூ எதிர்நோக்குகிறார்.
டானும் சூவும் 2015 வாக்கில் கூட்டாகச் செயல்பட்டு தேசிய வளர்ச்சி அமைச்சை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சமயத்தில் மின்சாரப் பணிகளும் இயந்திரச் சேவைகளும் வழங்கும் கிம் இயூ இன்டீகிரேட்டட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் டான்.
இயந்திர, மின்சாரப் பராமரிப்புப் பணிகளுக்காக அமைச்சு அமர்த்தியிருந்த கிம் இயூ இலக்ட்ரிக்கல் அண்ட் செனிட்டரி நிறுவனத்திலும் அவர் ஓர் இயக்குநராக இருந்தார்.
மெக்ஸ்வெல் சாலையிலிருந்த அமைச்சின் கட்டடத்தில் பணிகள் மேற்கொள்ள இயூ இலக்ட்ரிக்கல் அண்ட் செனிட்டரி நிறுவனம் “ட்ரீஸ் ட்ரேடிங் அண்ட் இன்ஜீனியரிங்” எனும் இன்னொரு நிறுவனத்தைத் துணைக் குத்தகையாளராக நியமித்திருத்தது. இந்த நிறுவனத்தில் சூ இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார்.
அமைச்சுக்காக மேற்கொள்ளப்பட்ட சில பணிகளுக்கு “ட்ரீஸ் ட்ரேடிங் அண்ட் இன்ஜினியரிங்” நிறுவனத்துடன் இயூ இலக்ட்ரிக்கல் அண்ட் செனிட்டரி நிறுவனத்திற்கு விலைத்தள்ளுபடி ஏற்பாடு இருந்ததை மூடிமறைத்து அமைச்சை ஏமாற்ற இருவரும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சை ஏமாற்றுவதற்காக மற்ற துணைக் குத்தகையாளர்களின் பெயரில் 67 போலி விலையறிக்கைகளைத் தயாரிக்க தனது ஊழியர்களுடன் சேர்ந்து சதிசெய்ததாகவும் சூ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


