யுஎன்சி3886க்கு எதிராக மிகப் பெரிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கை

யுஎன்சி3886க்கு எதிராக மிகப் பெரிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கை

2 mins read
1ea1c127-74ff-4dc6-82b5-88ff953af176
திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற இணையப் பாதுகாவலர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இணையம் மூலம் வேவு பார்த்து, இணையத் தாக்குதல் நடத்தும் யுஎன்சி3886 குழுவுக்கு எதிராக ஆறு அரசு அமைப்புகளுடன் நான்கு உள்ளூர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இணையப் பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவே இணையத் தாக்குதல்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் நடத்தும் மிகப் பெரிய, ஒருங்கிணைந்த எதிர்நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ஆப்பரேஷன் சைபர் கார்டியன்’ தொடங்கிவைக்கப்பட்டது.

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்11, சிம்பா ஆகிய உள்ளூர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்ததும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்தது.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், உத்திபூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்களுக்கான மையம், சிங்கப்பூர் விமானப் படையின் மின்னிலக்க, உளவுச் சேவை, சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகிய ஆறு அரசாங்க அமைப்புகளும் இணையத் தாக்குதலுக்கு எதிரான போரில் ஈடுபடுகின்றன.

யுஎன்சி3886 குழு அதிநவீன உத்திகளைக் கையாள்வதாலும் இணையத் தாக்குதல் நடத்திய பிறகு அதற்கான தடயங்களை விட்டுச்செல்லாமல் அவற்றை அழித்துவிடும் ஆற்றலைக் கொண்டிருப்பதாலும் அதை எதிர்கொண்டு முறியடிப்பது சவால்மிக்க பணியாகும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை இணையப் பாதுகாப்பு ஆலோசகர் லா சீ லின் தெரிவித்தார்.

திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற இணையப் பாதுகாவலர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சி பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்
இணையத் தாக்குதல்பாதுகாப்புநடவடிக்கை