மார்ச் 14-17: தானா மேரா-எக்ஸ்போ இடையே ரயில் சேவை கிடையாது

மார்ச் 14-17: தானா மேரா-எக்ஸ்போ இடையே ரயில் சேவை கிடையாது

2 mins read
5eaa49a7-b6f7-49e7-acf4-054b93cc0bd4
பாதிக்கப்பட்ட பயணிகள், தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே பயணம் செய்ய, இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தலாம்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் தானா மேரா நிலையத்திற்கும் எக்ஸ்போ நிலையத்திற்கும் இடையே மார்ச் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில், கிழக்கு - மேற்குப் பாதையைச் சாங்கி பணிமனையுடன் இணைக்கும் தண்டவாளத்தைத் துண்டிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தகவல்களை நிலப்போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட பயணிகள், தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே பயணம் செய்ய, இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தலாம்.

அப்பேருந்துச் சேவை கிட்டத்தட்ட ஐந்து முதல் எட்டு நிமிட இடைவெளியில் செயல்படும்.

மாறாக, டௌன்டவுன் ரயில் பாதை போன்ற பிற பெருவிரைவு ரயில் பாதைகளுக்குச் செல்ல பயணிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம்.

எக்ஸ்போ, சாங்கி விமான நிலையத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் ஏழு நிமிட இடைவெளியில் செயல்படும் என்றும் துவாஸ் லிங்க், பாசிர் ரிஸ் இடையிலான ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது.

ஏழு மாதங்களுக்கு ஒரு வழிப்பாதையில் செங்காங் வெஸ்ட் இலகு ரயில் பாதை

இதற்கிடையே, செங்காங் - பொங்கோல் இடையிலான இலகு ரயில் சேவைகள் ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 18ஆம் தேதி வரை ஏழு மாதங்களுக்கு ஒரு வழிப் பாதையில் (single loop) மட்டுமே செயல்படும்.

அந்தக் காலக்கட்டத்தில், செங்காங் நிலையத்திலிருந்து செங் லிம் நிலையம் வழியாகச் செல்லும் ரயில் சேவை இயங்காது என நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

வார நாள்களில் நெரிசல் மிகுந்த உச்ச நேரங்களில் செங்காங் பேருந்து நிலையத்திலிருந்து இடைவழிப் பேருந்துச் சேவை இயங்கும்.

அப்பேருந்துச் சேவை கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் செயல்படும் என்றும் அதற்கான பயணக்கட்டணம் இலகு ரயில் பயணக்கட்டணத்திற்கு இணையாகவே வசூலிக்கப்படும் என்றும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்