யூத சமயத் தொப்பி அணிந்திருந்த சிறுவனைத் திட்டிய ஆடவருக்குச் சிறை

யூத சமயத் தொப்பி அணிந்திருந்த சிறுவனைத் திட்டிய ஆடவருக்குச் சிறை

2 mins read
25d74494-ee5c-441c-a624-ce9aff810d27
முகம்மது அரிஃப் இஸ்மாயிலுக்கு 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் யூத சமயத் தொப்பியை அணிந்திருந்த 14 வயதுச் சிறுவனைத் தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடவருக்கு 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டில் இஸ்ரேலியர் ஒருவரிடம் அவரைக் கொல்லப்போவதாக அந்த ஆடவர் மிரட்டியிருந்தார்.

முகம்மது அரிஃப் இஸ்மாயில், 40, என்ற அந்த ஆடவர் தனிப்பட்ட சம்பவங்களின் தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை (மே 21) ஒப்புக்கொண்டார்.

மற்றொருவரின் இனரீதியான உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியது, முதியவரைக் காயப்படுத்தியது, திருட்டு ஆகியவையே அவை.

சிங்கப்பூரரான அரிஃப் சிறைக்குப் பலமுறைச் சென்றுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டில், 34 வயது இஸ்ரேலிய ஆடவரின் சமய உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அந்தக் குற்றத்திற்கு அரிஃபுக்கு மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கொங் ஸி வெய் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட பிறகு, இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதி அரிஃப் பேருந்து எண் 858ல் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, யூத சமயத் தொப்பி அணிந்திருந்த 14 வயது சிறுவனை அரிஃப் தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபரில் காமன்வெல்த் அவென்யூவில் உள்ள டாக்சி நிறுத்துமிடத்தில், 79 வயது முதியவரைத் தாக்கிய குற்றத்தையும் அரிஃப் ஒப்புக்கொண்டார்.

அதோடு, சென்ற ஆண்டு நவம்பரில், தங்ளின் ரோட்டில் உள்ள பேரங்காடி ஒன்றிலிருந்து அவர் $100க்கும் மேல் மதிப்புள்ள இரண்டு மதுபானப் போத்தல்களைத் திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
யூதர்சிறைதாக்குதல்