மோசடிக் கும்பலுக்கு நிதி அளித்த ஆடவருக்குச் சிறை

மோசடிக் கும்பலுக்கு நிதி அளித்த ஆடவருக்குச் சிறை

1 mins read
514eefcc-7ed7-4777-bf47-dc672529e07b
சிங்கப்பூரரான ரோனி லோ, 50, என்ற அந்த ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் S$52,000 அபராதமும் விதிக்கப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஆடவர் ஒருவர், குற்றவாளிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு ‘சாட்’ (chat) கணக்குகளை விற்றுவந்த ஒரு மோசடிக் கும்பலின் செயல்பாடுகளுக்கு நிதி வழங்குவதற்காக S$40,000 முதலீடு செய்தார்.

அந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் அவர் S$92,600க்கும் அதிகமான தொகையைப் பெற்றார்.

ஒரு கார் பழுதுபார்க்கும் பணிமனைக்கு மேலே இருந்த காலியான அலுவலக இடத்தில் இயங்கிவந்த அந்தக் கும்பலின் தலைமையகத்தில் திடீர்ச் சோதனை நடத்தியபோது, காவல்துறையினர் அங்கிருந்து 24,000 சிம் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

அந்த சிம் அட்டைகள் அனைத்தும் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த கிட்டத்தட்ட 2,400 காவல்துறைப் புகார்களுடன் தொடர்புடையவை.

மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் வேலை மோசடி, முதலீட்டு மோசடி, அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி போன்ற பல்வேறு மோசடிகள் மூலம் மொத்தம் 51 மில்லியன் வெள்ளியை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரரான ரோனி லோ, 50, என்ற அந்த ஆடவருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் S$52,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால், அவர் மேலும் ஐந்து மாதங்கள் சிறையில் இருக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த குற்றவியல் கும்பலில் உறுப்பினராக இருந்தது, குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம் ஆதாயம் பெறுவதற்கான குற்றச் சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை லோ ஒப்புக்கொண்டார்.

மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்