ஃபுட் ஜங்ஷன் (Food Junction) உணவங்காடி நிலையத்தின் அட்டைவழி கட்டணம் செலுத்தும் கட்டமைப்பு மூலம் பணத்தைக் கையாடிய ஆடவருக்கு ஈராண்டு, எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தவறான முறையில் கணினியைப் பயன்படுத்திய சட்டத்தின்கீழ் சீனாவைச் சேர்ந்த சாங் குய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து ஃபூட் ஜங்ஷன் உணவங்காடி நிலையம் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தியது.
ஃபுட் ஜங்ஷன் அட்டைகளில் ஏற்கெனவே உள்ள தொகையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் கழிவு விலையில் உணவு வாங்கிக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தொடக்கத்தில் தனித்தனிக் கடைகளில் உள்ள ‘நெட்ஸ்’ இயந்திரம் மூலம் தங்கள் அட்டைகளில் பணத்தை நிர்ப்பினர். அந்த நடைமுறை நவம்பர் 21ஆம் தேதி கைவிடப்பட்டது.
அப்போது சுயமாகப் பணத்தை நிரப்பிக்கொள்வதற்கான இயந்திரங்கள் உணவங்காடியில் நிறுவப்பட்டன.
அந்த இயந்திரங்களும் 2023ஆம் ஆண்டு செப்டம்பருடன் சேவை வழங்குவதை நிறுத்தின. ஃபுட் ஜங்ஷனின் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் அதே ஆண்டு நவம்பர் 28ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், அட்டையில் பணம் நிரப்பும் இயந்திரங்கள் அறிமுகமாகும் முன் கிரேட் வேர்ல்ட் சிட்டியில் உள்ள கடையில் சாங் வேலைக்குச் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2021 அக்டோபர் 30ஆம் தேதிக்கும் 2023 நவம்பர் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சாங் கடையில் இருந்த நெட்ஸ் சேவை வழி இயந்திரம் மூலம் 2,070 முறை $41,370 தொகையைத் தமது சொந்த ‘நெட்ஸ் ஃபிளேஷ்பே’அட்டையில் நிரப்பினார்.
வெவ்வேறு ஃபுட் ஜங்ஷன் உணவங்காடி நிலையங்களில் தமக்கும் தமது நண்பர்களுக்கும் உணவும் பானமும் வாங்கிக்கொள்ள அந்தத் தொகையை சாங் பயன்படுத்தினார்.

