ரயிலில் மூதாட்டியைத் தள்ளி வீழ்த்தியவருக்கு 30 வாரச் சிறை

ரயிலில் மூதாட்டியைத் தள்ளி வீழ்த்தியவருக்கு 30 வாரச் சிறை

2 mins read
317ec9cc-1f0e-472f-a3cd-1a7adb6f1d1c
மூதாட்டியையும் அவருக்கு உதவிசெய்தோரையும் பார்த்து இன ரீதியான கருத்துகளை ஜுனாபி அபு பக்கர் கூறினார். சண்டைக்கு வருமாறும் அவர் சவால்விட்டார்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எம்ஆர்டி ரயிலில் 76 வயது மூதாட்டியைத் தள்ளித் தரையில் வீழ்த்திய ஆடவருக்கு 30 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜுனாபி அபு பக்கர், அவர்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அரசாங்க ஊழியருக்கு எதிராக ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தியது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது முதலியவையும் அவற்றில் அடங்கும்.

மூதாட்டி, அவரை அறியாமல் 65 வயது ஜுனாபியின் காலை மிதித்தார். அதனால் சினமடைந்த ஜுனாபி, மூதாட்டியை ரயிலின் தரையில் தள்ளிவிட்டார். மூதாட்டியிடம் அவர் மீண்டும் மீண்டும் ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தினார். கீழே விழுந்தவருக்குச் சிலர் உதவினர். மூதாட்டியையும் அவருக்கு உதவிசெய்தோரையும் பார்த்து இன ரீதியான கருத்துகளையும் ஜுனாபி கூறினார். சண்டைக்கு வருமாறும் அவர் சவால்விட்டார்.

முதுகில் காயம் ஏற்பட்ட மூதாட்டிக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்புக் கொடுக்கப்பட்டது. அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதே நாள் பின்னேரத்தில், பதின்மவயதுப் பெண்ணை ஜுனாபி பகடிவதை செய்தார். அதை நிறுத்துமாறு கூறிய காவல்துறை அதிகாரி மீதும் ஆபாசமான சொற்களை அவர் பயன்படுத்தினார். அதிகாரி, தாம் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று சொன்னதும், ஜுனாபி அவரைச் சரமாரியாகக் குத்தினார். அதைத் தடுத்த அதிகாரி, காவல்துறையின் உதவியை நாடினார். ரயிலில் ஜுனாபியை அவர் பின்தொடர்ந்தார்.

யூனோஸ் எம்ஆர்டி நிலையத்தில் ஜுனாபி கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யச் சென்ற அதிகாரிகளிடமும் அவர் இன ரீதியான சொற்களைப் பயன்படுத்தினார். அதிகாரிகளுடன் ஜுனாபி ஒத்துழைக்கவில்லை.

மற்றொரு சம்பவத்தில், செப்டம்பர் 10ஆம் தேதி, உட்லண்ட்சில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் வளாகத்தில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூண்ட சர்ச்சையில் சக ஊழியரை ஜுனாபி குத்தினார்.

பாதிக்கப்பட்டவருக்கு வயது 65. அவரின் இடக்கையில் எலும்பு முறிவும் நெற்றியில் சிராய்ப்பும் ஏற்பட்டன. 14 நாள் மருத்துவ விடுப்புக் கொடுக்கப்பட்ட அவர், காவல்துறையில் புகாரளித்தார்.

அரசாங்க ஊழியருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஏழாண்டு வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படக்கூடும். பிரம்படியும் கொடுக்கப்படலாம்.

அரசாங்க ஊழியரை நோக்கி ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையோ S$5,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிமூதாட்டிகுற்றம்சிறைத்தண்டனை