சுவா சூ காங்கில் கொல்லப்பட்ட பெண்; ஆடவர் மீது குற்றச்சாட்டு

சுவா சூ காங்கில் கொல்லப்பட்ட பெண்; ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
0eba0c08-5a0d-4e6f-beb7-7ea2d0f343bc
சுவா சூ காங் அவென்யூ 2, புளோக் 248ல் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சுவா சூ காங் வட்டாரத்தில் பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 22 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முகமது ஃபாயிஸ் உமார் என்ற ஆடவர் 21 வயது திருவாட்டி சுவா பீ டிங் என்ற பெண்ணை செவ்வாய்க்கிழமை (மே 26) கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ நாளன்று இரவு 8.53க்கும் 9.22க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்தூக்கிக்குள் வைத்து ஆடவர் அந்தப் பெண்ணைக் கொலைசெய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

முதற்கட்ட விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கை, ஆடவரும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்பதைக் குறிப்பிடப்பட்டது. ஆனால், அவர்களுக்கு இடையில் உள்ள உறவு குறித்து நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

மே 26ஆம் தேதி, சுவா சூ காங் அவென்யூ 2, புளோக் 248ல் இரவு கிட்டத்தட்ட 9 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், புளோக்கின் 12வது மாடியில் திருவாட்டி சுவா பேச்சு மூச்சின்றிக் கிடந்ததைக் கண்டனர். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சம்பவ இடத்தில் திருவாட்டி சுவாவின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

சம்பவம் தொடர்பில் புளோக்கின் கீழ்த்தளத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் விழுந்துகிடந்த சந்தேக நபரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

ஃபாயிசின் வழக்கு ஜூன் 18ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
சுவா சூ காங்கொலைஆடவர்குற்றச்சாட்டு