பிடோக்கில் உள்ள கோயில் உண்டியலில் திருடிய ஆடவர் கைது

பிடோக்கில் உள்ள கோயில் உண்டியலில் திருடிய ஆடவர் கைது

1 mins read
c7a9fa6a-b30c-43be-8dd8-ee63b3cbeeac
கைதுக்குப் பிறகு ஆடவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம். - படம்: ஏஷியா ஒன்/சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

பிடோக் நார்த் அவென்யூ 3ல் உள்ள ஒரு கோயிலில் இருந்த உண்டியலில் திருடிய 55 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கையில் ஓர் இடத்தில் அனுமதியின்றி புகுந்து திருடிய சம்பவம் குறித்து அன்றையதினம் அதிகாலை 4.06 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூறியது. அந்த திருட்டில் கோயில் உண்டியலில் இருந்த $390 கொள்ளையடிக்கப்பட்டது.

பிடோக் காவல்நிலையத்தின் அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். காவல்துறை வைத்திருந்த படங்களுடனும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் (சிசிடிவி) உதவியுடனும் திருடனின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

புகார் கிடைத்த மூன்று மணிநேரத்தில் தாம் சந்தேக நபரை கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அந்த நபரிடம் இருந்து $290 பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையில் அந்த ஆடவர் ஏற்கெனவே அதே கோயிலில் நடந்த $1,965 தொகைக்கான இரு திருட்டுச் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளவர் என்று தெரியவந்துள்ளது.

அந்த இரண்டு சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட ஆடவர்மீது சனிக்கிழமை குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படியுடன் அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
பிடோக்திருட்டுபணம்ரொக்கம்காவல்துறைகைதுஆடவர்கோயில்