பொத்தோங் பாசிரில் உள்ள வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பொருள்களையும் வைத்திருந்ததன் தொடர்பில் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களை வைத்திருந்ததாக புதன்கிழமை (ஏப்ரல் 08) அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
லீ சுவான் ஷெங் எனும் அந்த ஆடவர் தனது வீட்டிலிருந்து வெடிபொருள்களைப் பயன்படுத்தியதற்காகக் கடந்த திங்கட்கிழமை பிடிபட்டார்.
காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் உள்ள ஒரு வீட்டிலிருந்து யாரோ வெடிபொருள்களைப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல்துறையின் அங் மோ கியோ பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பலவகைத் துப்பாக்கிகள், வில்-அம்புகள், கவண்கள், கத்திகள், மின்னதிர்வு உண்டாக்கும் கருவி போன்றவற்றுடன் முப்பரிமாண அச்சிடு கருவியையும் அதற்குப் பயன்படும் அச்சுப்பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த ஆடவர் அரித்தழிக்கும், வெடிபொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் (Corrosive and Explosive Substances and Offensive Weapons Act) கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் என்று காவல்துறை கூறியது. ஆனால், மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் அறவே பொறுத்துக்கொள்ளப்படமாட்டா என்று காவல்துறை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு மீண்டும் மே 6ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
ஆயுதம் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறை குற்றம் புரிந்தவருக்கு ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றச்செயலில் ஈடுபட்டால் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

