ஏடிஎம் இயந்திரங்களுக்குள் ‘டி‌‌ஷ்ஷு’ தாளை நுழைத்ததாக நம்பப்படும் ஆடவர்

ஏடிஎம் இயந்திரங்களுக்குள் ‘டி‌‌ஷ்ஷு’ தாளை நுழைத்ததாக நம்பப்படும் ஆடவர்

1 mins read
9900520e-769a-4b62-bba8-f3e54c880ee5
சம்பந்தப்பட்ட வங்கி இதுகுறித்து காவல்துறைக்குத் தெரியப்படுத்தியது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

ஏடிஎம் இயந்திரங்களுக்குள் மெல்லிழைத் தாள்களை நுழைத்ததாக நம்பப்படும் ஆடவர்மீது சனிக்கிழமை (மே 2) குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி அட்டையை நுழைக்கும் பகுதிக்குள் அவர் மெல்லிழைத் தாள்களை நுழை‌த்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அச்செயலால் பல இடங்களில் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

முக்கியச் சேவைகளை பாதிக்கும் வகையிலான பல குறும்புச் செயல்களில் 37 வயது சந்தேக நபர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (மே 1) அறிக்கை மூலம் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 27லிருந்து 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட பல குறும்புச் செயல்கள் குறித்து வங்கி ஒன்று தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் காவல்துறையினர் கூறினர். அந்த ஆடவர் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்கள் சரியாகச் செயல்படாததற்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.

புகாரளித்தது எந்த வங்கி என்பதைக் காவல்துறை குறிப்பிடவில்லை. பேட்டரி ரோடு, சைனாடவுன், தஞ்சோங் பகார், உட்லண்ட்ஸ், தோ பாயோ, மரினா பே, பாய லேபார் போன்ற பகுதிகளில் சில ஏடிஎம் இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட இயந்திரங்களைச் சரிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஏடிஎம்குற்றச்சாட்டுகாவல்துறை