சிங்கப்பூரில் தீங்குநிரல் பாதிப்பு இருமடங்காக அதிகரிப்பு

சிங்கப்பூரில் தீங்குநிரல் பாதிப்பு இருமடங்காக அதிகரிப்பு

2 mins read
c1f03d4b-34d3-4e9a-b994-0daf517f59e7
வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளையே பிணைநிரல் மோசடிப் பேர்வழிகள் அதிகம் குறிவைக்கின்றனர். - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சென்ற 2025ஆம் ஆண்டு தீங்குநிரல்களால் பாதிக்கப்பட்ட கணினி அமைப்புகளின் எண்ணிக்கை 284,000ஆக அதிகரித்தது.

முந்திய 2024ஆம் ஆண்டில் தீங்குநிரல்களால் 117,300 கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்ட ‘சிங்கப்பூர் இணையவெளி நிலவரம்’ அறிக்கை தெரிவிக்கிறது.

கணினிகள், சேவையகங்கள், ‘ஐஓடி’ எனப்படும் இணையவழித் தொடர்புக் கருவிகள் ஆகிய ‘பாட்நெட்’ கருவிகள் தீங்குநிரல்களால் பாதிக்கப்பட்டன.

“‘பாட்நெட்’ கருவிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் மேம்பட்டதும், வலுக்குறைந்த பாதுகாப்பு கொண்ட பயனீட்டாளர் ‘ஐஓடி’ கருவிகள் பயன்படுத்தப்படுவதும் தீங்குநிரல் பாதிப்பு அதிகரிப்பிற்குக் காரணங்களாகும்,” என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

இதனைத் தடுக்க, 2027 இறுதிக்குள் சிங்கப்பூரில் விற்கப்படும் அனைத்து வீட்டு ‘வைஃபை ரௌட்டர்’களும் இணையப் பாதுகாப்பு அமைப்பின் கடுமையான இரண்டாம் நிலைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையத் தாக்குதல்களைத் தானியக்க முறையில் வேகப்படுத்த ‘ஏஐ முகவர்கள்’, ‘மைத்தோஸ்’ போன்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைத் தாக்குதல்காரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று அவ்வமைப்பின் இப்போதைய தலைவர் டேவிட் கோ தெரிவித்துள்ளார். ‘ஓப்பன்கிளா’ போன்ற ஏஐ கருவிகள், குரல் நகல், வன்போலிக் காணொளிகள் ஆகியவற்றின் மூலமும் இணைய மோசடிகள் அதிகரிக்கின்றன.

இருப்பினும், 2024ஆம் ஆண்டில் 6,100ஆகப் பதிவான தூண்டுகளவு சம்பவங்கள் 2025ல் 20 விழுக்காடு குறைந்தது 4,800ஆகப் பதிவாயின. அதே காலகட்டத்தில் பிணைநிரல் தாக்குதல்களின் எண்ணிக்கை 159லிருந்து 165 எனச் சற்றே உயர்ந்தது.

வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளையே பிணைநிரல் மோசடிப் பேர்வழிகள் அதிகம் குறிவைக்கின்றனர். அவற்றைத் தொடர்ந்து, அரசு அமைப்புகளும் தளவாடத் துறையும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இதனால் அதிகம் பாதிக்கப்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘இணைய மீள்திறன் நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளதாக இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்