உட்லண்ட்சில் ஆகஸ்ட் 19ஆம் தேதி மலேசியாவின் ‘விஇபி’ தகவல் மையம் திறப்பு

2 mins read
25d97e5b-2dde-4eb0-8740-948494f7a72d
உட்லண்ட்ஸ் கிளை அலுவலகத்தின் முகவரியும் அது செயல்படும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும். - படம்: பெர்னாமா

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார்களை ஓட்டுவோர், மலேசியாவின் ‘விஇபி’ எனப்படும் வாகன நுழைவு அனுமதியைப் பெறுவது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உட்லண்ட்சில் தகவல் மையம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி அந்தத் தகவல் மையம் திறக்கப்படுமென மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) தெரிவித்தது.

தகவல் மையத்தின் முகவரியும் அது செயல்படும் நேரம் குறித்த தகவலும் பின்னர் அறிவிக்கப்படும் என்று ‘விஇபி’ தொடர்பில் வாகனமோட்டிகளுக்கு உதவ ‘ஜேபிஜே’யால் நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம் தெரிவித்தது.

வாகன நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தல், அந்த அனுமதியைக் காட்டும் அடையாள வில்லைகளை காரில் பொருத்துதல் ஆகியவற்றில் அந்த நிறுவனம் வாகனமோட்டிகளுக்கு உதவும்.

ஜோகூர் பாருவின் டங்கா பேயில் ‘விஇபி’ நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இருப்பினும், வாகன நுழைவு அனுமதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்ததை அடுத்து, அந்த நிலையத்துக்கு வருகையாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் உட்லண்ட்சில் கிளை அலுவலகத்துக்கான தேவை எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி டங்கா பே ‘விஇபி’ நிலையத்திற்குச் சென்றபோது, உட்லண்ட்சில் உள்ள புதிய முகப்பை ‘டிசிசென்ஸ்’ நிறுவனம் அதன் சிங்கப்பூர் பங்காளித்துவ நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் என்று அமைச்சர் கூறினார்.

உதவி தேவைப்படும் ஓட்டுநர்கள் உட்லண்ட்ஸ் நிலையத்திற்கு நேரில் செல்லலாம். இதுகுறித்த தகவல்களைப் பெறுவதற்காக அன்றாடம் 16 மணி நேரம் செயல்படும் நேரடித் தொலைபேசி எண்ணும் வழங்கப்படும்.

அமலாக்கம் குறித்த தமது அறிவிப்பு வெளியான பிறகு, டங்கா பே நிலையத்தில் வருகையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக அமைச்சர் லோக் கூறினார்.

வாகனமோட்டிகள் தங்கள் ‘விஇபி-ஆர்எஃப்ஐடி’ அடையாள வில்லைகளைப் பெற்றுக்கொண்ட ஏழு நாள்களுக்குள் அவற்றைச் செயலாக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தினார். அவ்வாறு செய்யத் தவறியோர், விண்ணப்ப இணையவாசலை நாடலாம்.

வெளிநாட்டு வாகனமோட்டிகளை அச்சுறுத்துவது ‘விஇபி’அமலாக்கத்தின் நோக்கமன்று என வலியுறுத்திய அமைச்சர் லோக், அவர்கள் மலேசியச் சட்டத்தை மதித்து நடப்பதை உறுதிசெய்வதே நோக்கம் என்றார். மலேசிய அரசாங்கம் இந்த நடைமுறைக்கு 100 மில்லியன் ரிங்கிட்டிற்குமேல் செலவு செய்திருப்பதை அவர் சுட்டினார்.

“ஜோகூர் பாருவின் பொருளியல் வளர்ச்சி காணவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அங்கு வந்து பொருள்கள் வாங்கச் சிங்கப்பூரர்களை வரவேற்கிறோம். அவர்கள் சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்