பணிப்பெண் மரண வழக்கு: குற்றவாளியின் தண்டனை உயர்த்தப்பட்டது

பணிப்பெண் மரண வழக்கு: குற்றவாளியின் தண்டனை உயர்த்தப்பட்டது

2 mins read
84ef264e-91f0-4399-b874-898fd8e86096
முன்னாள் காவல்துறை அதிகாரி கெவின் செல்வம் (இடது). தொடர் துன்புறுத்தலில் மரணம் அடைந்த மியன்மார் பணிப்பெண் பியங் ஙாய் டொன். - கோப்புப்படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

கடந்த 2016ஆம் ஆண்டில் தாம் வேலை செய்த குடும்பத்தின் உறுப்பினர்களால் கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த 24 வயது பியங் ஙாய் டொன் என்ற மியன்மார் நாட்டுப் பணிப்பெண்ணின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அவ்வழக்கில் ஒரு பெண், அவரது தாய், கணவர் ஆகியோரின் குற்றங்கள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டன. அந்த மூவரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய், மகள் ஆகிய இருவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.

எஞ்சி இருந்த கெவின் செல்வம் என்ற ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது முறையீடு தோல்வியடைந்த பிறகு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது போதாது என அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம், அவரது தண்டனையை மேலும் ஒன்றரை ஆண்டுகாலம் உயர்த்தியது. அதன்படி அவர் பதினொன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டது.

கெவின் செல்வத்தின் முன்னாள் மனைவி காயத்ரி முருகையன் என்ற மாதுக்கு 2021ஆம் ஆண்டில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பணிப்பெண் கொடுமைக்கான வழக்குகளில் வழங்கப்பட்ட ஆக அதிகச் சிறைத் தண்டனை அதுவாகும். மரணம் விளைவித்தது உட்பட தன்மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 87 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

காயத்ரியின் தாயார் பிரேமாவிற்கு 2023ஆம் ஆண்டில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய 48 குற்றங்களை ஒப்புக்கொண்டார். மருமகன் கெவின் செல்வத்தை சாட்சியங்களை மறைக்கத் தூண்டிய குற்றமும் அவற்றில் அடங்கும்.

காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கெவின் செல்வம் அதிலிருந்து 2016ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 2020ஆம் ஆண்டில் தமது மனைவி காயத்ரியிடமிருந்து மணவிலக்கு பெற்றார்.

குறிப்புச் சொற்கள்
பணிப்பெண்கொடுமைகுற்றம்சிறைத்தண்டனைகாவல்துறைஉயர் நீதிமன்றம்தீர்ப்புமாதுதாய்மனைவி