முதலாளியின் நாயைக் கொன்றதாக சந்தேகம்; பணிப்பெண்ணிடம் விசாரணை

முதலாளியின் நாயைக் கொன்றதாக சந்தேகம்; பணிப்பெண்ணிடம் விசாரணை

2 mins read
274a261b-1fee-498c-9649-6c7ea15983b5
நாயைப் பணிப்பெண் அடிப்பதைக் காட்டும் படம். - படம்: டெரிக் டான்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

தன் முதலாளியின் நாயை அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த இச்சம்பவம் குறித்த விவரங்களை உயிரிழந்த நாயினுடைய உரிமையாளரின் நண்பரான மூத்த விலங்கு ஆர்வலர் டெரிக் டான் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.

அதில், அண்மையில் தன் நண்பரும் நாயின் உரிமையாளருமான திரு ஜேசன் (உண்மையான பெயரன்று) தனது செல்லப் பிராணியையும் வீட்டையும் பராமரிக்க பணிப்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி மாலை ஜேசனுக்குத் தன் தோழியிடமிருந்து நாய் இறந்துவிட்டதாக அழைப்பு வந்தது. நாய் இயற்கையாக இறந்துவிட்டது என எண்ணிய ஜேசனும் அவருடைய தோழியும் அதைத் தகனம் செய்ய முடிவு செய்தனர்.

“நாயின் உடல் இயற்கையாக மரணம் அடைந்ததைப் போலல்லாமல் அதிர்ச்சியில் இறந்துவிட்டதைப் போன்று இருந்ததை ஜேசன் கவனித்தார். தகனம் செய்தபின் அந்நாயின் மண்டை ஓட்டின் எச்சங்களைப் பார்த்தபோது அதில் விரிசல் இருந்ததையும் அவர் கண்டார்,” எனத் திரு டான் தனது பதிவில் கூறினார்.

சந்தேகத்தின்பேரில் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காணொளிகளை ஆய்வு செய்தார் ஜேசன்.

அதில், அந்தப் பணிப்பெண் நாயின் தலையில் தனது கைகளைக் கொண்டும் தடிமனான கம்பிகளைக் கொண்டும் அடிப்பதை அவர் கண்டார்.

மேலும், நாயை மாடத்தின் கம்பியில் ஒரு பட்டையைப் பயன்படுத்தித் தொங்கவிட்டதையும் அந்தக் காணொளியில் காண முடிந்ததாக திரு டான் தனது பதிவில் விவரித்தார்.

அந்தப் பணிப்பெண்ணின் இந்த மிருகத்தனமான செயல் குறித்துத் தங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது என விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கூறியது.

அந்தப் பணிப்பெண்மீது காவல்துறையில் புகார் அளிக்குமாறு ஜேசனை அறிவுறுத்தியதாகவும் சங்கம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்