குறைவான கரியமிலவாயு வெளியேற்றம்: ஸ்கூட் முதலிடம்

குறைவான கரியமிலவாயு வெளியேற்றம்: ஸ்கூட் முதலிடம்

2 mins read
f6abbe61-d590-4aa1-9bb5-4a248e519093
ஸ்கூட் விமானங்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சென்ற ஆண்டு ஆகக் குறைந்த அளவு கரியமிலவாயுவை வெளியேற்றும் விமானங்களுக்கான உலகளாவியப் பட்டியலில் ஸ்கூட் சேவை முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்கூட்டை வழிநடத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐ‌ஏ) நிறுவனம், தென்கிழக்காசியாவில் இரண்டாம் இடத்தில் வந்தது. விமானத்துறைப் புள்ளிவிவர நிறுவனமான சிரியம் நடத்திய உலகளாவியக் கருத்தாய்வில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

விமானங்களின் கரியமிலவாயு வெளியேற்றம் தொடர்பிலான உலகளாவியப் பட்டியலில் தென்கிழக்காசிய விமானம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்று புதன்கிழமை (ஏப்ரல் 15) கருத்தாய்வு முடிவுகளை வெளியிட்டபோது சிரியம் குறிப்பிட்டது. 2024ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்த ஹங்கேரியின் விஸ் ஏர் (Wizz Air) விமானச் சேவையை ஸ்கூட் 2025ல் பின்னுக்குத் தள்ளியது.

உலகளவில் ஆகப் பெரிய அளவில் இயங்கும் 100 பயணிகள் விமானச் சேவைகளைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே இவ்வாண்டின் ஆகச் சிறந்த விமானச் சேவை என்ற பெருமையைப் பெற்ற ஸ்கூட் இப்போது மேலும் ஓர் அங்கீாரத்தைப் பெற்றிருக்கிறது.

தென்கிழக்காசியாவில் வியட்னாமின் வியட்ஹெட் ஏர் முதலிடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வந்தது.

சிறப்புத் தேர்ச்சிக்கான காரணங்கள்

செயல்பாடு, எத்தனை சேவைகளை எப்போது செயல்படுத்துவது ஆகியவற்றின் தொடர்பில் வலுவான முடிவுகளை எடுத்ததே சிங்கப்பூரின் ஸ்கூட், எஸ்ஐஏ இரண்டும் கருத்தாய்வில் சிறப்பாகச் செய்ததற்குக் காரணம் என்று சிரியம் நிறுவனத்தின் தலைமை தொழில்துறை அதிகாரி மைக் மாலிச், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) மெய்நிகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். ஓரளவு புதிய விமானங்களைத் தங்கள்வசம் வைத்திருப்பதும் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லப் போதுமான இருக்கைகளைக் கொண்டிருப்பதும் ஸ்கூட்டின் சிறப்புத் தேர்ச்சிக்குக் காரணங்கள் என்றும் அவர் சொன்னார்.

ஸ்கூட்டின் ஒவ்வொரு விமானமும் சராசரியாக 6.7 ஆண்டுகள் பழைமையானவை. அதன் ஒவ்வொரு விமானத்திலும் சராசரியாக 242 இருக்கைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட விமானங்களை ஸ்கூட் இயக்குகிறது.

ஸ்கூட்டின் இணையத்தளத்தில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஸ்கூட்கரியமிலவாயுசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்எஸ்ஐஏ