உள்ளூர் காய்கறி விலைகள் 10% வரை உயரலாம்: பண்ணைகள்

எரிபொருள், போக்குவரத்து, உர விலை அதிகரிப்பால் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பண்ணைகள்

உள்ளூர் காய்கறி விலைகள் 10% வரை உயரலாம்: பண்ணைகள்

2 mins read
418e784f-451c-4a66-a653-71361d7df359
வீடமைப்பு வளர்ச்சிக் கழக பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள ‘எஸ்ஜி வெஜ்’ பண்ணை கீரை வகைகளை உற்பத்தி செய்கிறது. - கோப்புப் படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஈரான் - அமெரிக்கா - இஸ்‌ரேல் போரினால் உலகளாவிய எரிசக்தி, உரச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அடுத்த ஆறு மாதங்களில் சிங்கப்பூரின் உள்ளூர் காய்கறிப் பண்ணைகள் விலையை 10% வரை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூரிலிருந்தும் மலேசியாவிலிருந்து பெறப்படும் உரங்களின் விலைகூட 30 விழுக்காடுவரை உயர்ந்துள்ளதாக பண்ணைகள் தெரிவித்தன.

அட்மிரால்டியில் உள்ள ‘எஸ்ஜி வெஜ்’ பண்ணை இடப்பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவிலேயே உரங்களைச் சேமித்து வைக்கிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள இந்தப் பண்ணை, பெரும்பாலும் கீரை வகைகளைப் பயிர்செய்கிறது.

“ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் உரம் வாங்க வேண்டியுள்ளது, இதனால் விலை ஏற்றத்தின் பாதிப்பு நேரடியாகத் தாக்குகிறது,” என்று அதன் நிறுவனர் ஈலின் கோ தெரிவித்தார்.

இதற்குத் தீர்வாக, மின்சாரச் செலவைக் குறைக்க சூரிய ஒளியை அதிக அளவில் பயன்படுத்துவது, இடத்தை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக பண்ணையை மறுவடிமைப்பது போன்ற மாற்று வழிகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.

ஜூரோங்கில் உள்ள ‘வெஜிஃபோனிக்’ பண்ணை, அடுத்த ஆறுமாத காலத்துக்கான உரத்தைச் சேமித்து வைத்துள்ளது. எனினும், எரிபொருள், போக்குவரத்துச் செலவு உயர்வால் ஏற்கெனவே லாபத்தில் 10 விழுக்காடு இழப்பைச் சந்தித்துள்ளது.

செலவைக் குறைக்க வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து விநியோகச் சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

லிம் சூ காங்கில் உள்ள ‘மியோட்’ பண்ணை, விநியோகச் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்ச தருவிப்பு ஆணைத் தொகையை $40லிருந்து $80ஆக உயர்த்தியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளைவிட உள்ளூர் காய்கறிகளின் விலை உயராமல் இருக்க பண்ணையாளர்கள் முயற்சி செய்தாலும், தற்போதைய நிலைமை நீடித்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாமல் போகக்கூடும்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பூர் மக்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பண்ணைகாய்கறிவிலையேற்றம்எரிபொருள்ஈரான் போர்மலேசியா