உள்ளூர் நிறுவனம் வோ ஹப்பிற்கு சொகுசுத்தலம் கட்ட $8 பில்லியன் குத்தகை

உள்ளூர் நிறுவனம் வோ ஹப்பிற்கு சொகுசுத்தலம் கட்ட $8 பில்லியன் குத்தகை

2 mins read
d7ff04a4-03f1-4af5-bb61-72e1a1e47d0f
மரினா பே சேண்ட்ஸ் வளாகத்துக்கு அருகே சொகுசு ஹோட்டலுடன் கூடிய 55 மாடி வளாகம் அமைக்கப்படவிருக்கிறது. - படம்: சாஃப்டி ஆர்க்கிடெக்ட்ஸ்
Google News Preferred Icon

மரினா பே வட்டாரத்தில் உல்லாச விடுதியையும் பொழுதுபோக்கு வளாகத்தையும் கட்டுவதற்கான குத்தகை, வோ ஹப் என்ற உள்ளூர்க் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் நிறுவனத்தின் அந்தப் புதிய வளாகத்தைக் கட்டுவதற்கான குத்தகையின் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்.

புதிய உல்லாசத்தலம் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்றும் ஊழியர்கள் 24 மணிநேரமும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் நிறுவனம் கூறியது.

மரினா பே சேண்ட்ஸ் உல்லாச விடுதிக்கு அருகில் புதிய வளாகம் அமைக்கப்படும்.

அந்த 55 மாடிக் கட்டடத்தில் 570 சொகுசு ஹோட்டல் அறைகள், 15,000 பேர் அமரக்கூடிய பொழுதுபோக்கு அரங்கம், கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கு 200,000 சதுர அடியிலான மண்டபம், சொகுசு உணவகங்கள் ஆகியவை உருவாக்கப்படும்.

மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தைப் போலவே புதிய வளாகம் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட சாஃப்டி ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகிறது.

புதிய வளாகத்துக்கான குத்தகைக்குக் கடும் போட்டி இருந்ததாக லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் சொன்னது.

எனினும், உறுதியான தொழில்நுட்பத் திறன்கள், சிக்கலான கட்ட வடிவமைப்புகளைக் கையாளக்கூடிய திறன், பொறியியலிலும் வடிவமைப்பு நிர்வாகத்திலும் உள்ள ஆழமான புரிந்துணர்வு ஆகிய காரணங்களுக்காக வோ ஹப் நிறுவனத்திற்குக் குத்தகை வழங்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் ஆகப் பெரிய தனியார் கட்டுமானப் பொறியியல் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் வோ ஹப், ஜுவல் சாங்கி, கரையோரப் பூந்தோட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியது.

மரினா பே வட்டாரத்தில் வோ ஹப் குழுமம், மரினா பே குடியிருப்புகளையும் அமைத்தது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடையும் வகையில் நீண்டகாலமாக இங்குச் செயல்படுவதை வோ ஹப் நிறுவனத்துக்கு அளித்த குத்தகை மூலம் நிரூபித்துள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் நிறுவனம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்