லிம் தியென் மேல்முறையீடு நிராகரிப்பு: ஜூலை 20ல் சிறைவாசம் தொடக்கம்

லிம் தியென் மேல்முறையீடு நிராகரிப்பு: ஜூலை 20ல் சிறைவாசம் தொடக்கம்

2 mins read
0357fd39-9289-4561-8dfe-08ac81814188
மக்கள் குரல் கட்சி நிறுவனர் லிம் தியென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முறையான வழக்கறிஞர் சான்றிதழ் இன்றி சட்டப்பணியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, எதிர்க்கட்சி அரசியல்வாதியான லிம் தியென் ஜூலை மாதம் 20ஆம் தேதி சிறைத்தண்டனையைத் தொடங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 9ஆம் தேதி வரையிலான இரண்டு மாத காலத்தில், செல்லுபடியாகும் வழக்கறிஞர் சான்றிதழ் இல்லாமல் 32 முறை நீதிமன்ற விசாரணைகளில் லிம் தியென் கலந்துகொண்டதோடு பல ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

இதுதொடர்பான வழக்கில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றம் அவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனையும் $1,000 அபராதமும் விதித்தது.

தண்டனையை எதிர்த்து லிம் தியென் மேல்முறையீடு செய்தார்.

அவருக்குக் கூடுதல் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று லிம் தியெனின் சிறைத்தண்டனையை மூன்று மாதங்கள் ஒரு வாரமாக உயர் நீதிமன்றம் அதிகரித்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லிம் தியென் தாக்கல் செய்த விண்ணப்பத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு திங்கட்கிழமை (ஜூலை 6) நிராகரித்தது.

அவர் முன்வைத்துள்ள கேள்விகள் பொதுமக்களின் நலன் சார்ந்த சட்டக் கேள்விகள் அல்ல என்றும் இதனால் மேல்முறையீட்டிற்கான சட்ட விதிகளின் தகுதிநிலையை அவை பூர்த்தி செய்யவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கில் பொதுமக்கள் நலன் சார்ந்த சட்டக் கேள்விகள் உள்ளனவா என்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுக்கும்.

எதிர்க்கட்சியான மக்கள் குரல் கட்சி, மக்கள் சீர்திருத்தக் கூட்டணி ஆகியவற்றை நிறுவியவர் லிம் தியென்.

சிங்கப்பூரில் சட்டப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வழக்கறிஞர் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்