சிங்கப்பூரில் ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் விற்பனை இந்த ஆண்டின் (2025) முற்பாதியில் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், பாதுகாப்புக்கும் சொத்துச் சேர்ப்புக்கும் இடையே சமநிலை பேண விரும்பிய நிலையில் விற்பனை இவ்வாறு அதிகரித்துள்ளது.
புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் விற்பனைக்கு சராசரி மதிப்பீடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விற்பனையான புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டின் முற்பாதியில் புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் விற்பனை 7.7 விழுக்காடு அதிகரித்து $2.9 பில்லியனாகப் பதிவானது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப்பின் பதிவான ஆக அதிக விற்பனை இது.
ஆண்டுச் சந்தாத் திட்டங்களின் விற்பனை அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம். 2024ன் முற்பாதியுடன் ஒப்புநோக்க, இந்த ஆண்டு முற்பாதியில் இத்தகைய காப்புறுதித் திட்டங்களின் விற்பனை 22 விழுக்காடு அதிகரித்து $2.26 பில்லியனாகப் பதிவானது.
சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் (LIA) புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இந்தத் தகவல்களை வெளியிட்டது.
இவ்வேளையில், மொத்தச் சந்தாவையும் ஒரேநேரத்தில் செலுத்தும் ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் விற்பனை 21.3 விழுக்காடு சரிந்து $722.9 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதலீடு சார்ந்த காப்புறுதித் திட்டங்களின் (ILP) விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முற்பாதியில் அது 31.3 விழுக்காடு அதிகரித்து $1.28 பில்லியனாகப் பதிவானது.
ஒட்டுமொத்த புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் விற்பனையில் இத்தகைய திட்டங்களின் எண்ணிக்கை 43 விழுக்காடாகும்.
சங்கத்தின் தலைவர் வோங் ஸி கீட், ஆண்டுக்கொருமுறை சந்தா செலுத்தும் ஆயுள் காப்புறுதித் திட்டங்கள், முதலீடு சார்ந்த காப்புறுதித் திட்டங்கள் ஆகியவற்றின் விற்பனையில் தொடர்ந்து பதிவாகும் வளர்ச்சி, நீண்டகால நிதித் திட்டமிடலிலும் பாதுகாப்பிலும் சிங்கப்பூரர்கள் கவனம் செலுத்துவதைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
வாடிக்கையாளர்கள் கூடுதல் பாதுகாப்பு அல்லது முதலீட்டு மதிப்புள்ள விரிவான காப்புறுதித் திட்டங்களை நாடுவதாகச் சங்கம் கூறியது.
இந்த ஆண்டு முற்பாதியில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் என ஏறத்தாழ 69,000 பேர் புதிய ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் சேர்ந்துள்ளனர். சிங்கப்பூர்வாசிகளில் கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர், அதாவது 72 விழுக்காட்டினர், இத்தகைய ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் இணைந்ததாகக் கூறப்பட்டது.

