இளையரின் தீவிரவாதப் போக்கை தடுக்க சட்டம் மட்டும் போதாது: எட்வின் டோங்

இளையரின் தீவிரவாதப் போக்கை தடுக்க சட்டம் மட்டும் போதாது: எட்வின் டோங்

2 mins read
07a1c1d4-184e-4c77-a0d6-b7bf31b80fc3
ஷா தியேட்டர் லிடோ வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் அங்கத்தில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் (மேடையில் வலது), ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் தலைவர் ஓங் கெங் யோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

இளையர்களிடையே அதிகரித்துவரும் சுயதீவிரவாதப் போக்கைக் கட்டுப்படுத்த சட்டம் அடித்தளத்தை மட்டுமே வழங்குமே தவிர, அதை முன்கூட்டியே தடுக்க இணையப் பாதுகாப்பு, வலுப்படுத்தப்பட்ட சட்டக் கட்டமைப்பு முக்கியம் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

அடித்தள அமைப்புகளின் உதவி மூலம் இளையர்களுக்குத் தீவிரவாதப் போக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற அவர், பகுத்தறியும் திறனுடன் இணையத்தில் தகவல்களைக் கூர்ந்து ஆராய இளையர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உலக சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் சமூக விழிப்புணர்வு, ஒற்றுமை, மனவுறுதி ஆகியவற்றின்மீது சமகால உலகளாவிய விவகாரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கலந்துரையாடல் அங்கத்தில் கலந்துகொண்ட உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங் இவ்வாறு கருத்துரைத்தார்.

‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) ஷா தியேட்டர் லிடோ வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் அங்கத்தில் 100க்கும் மேற்பட்ட சமய, சமூகத் தலைவர்கள், பெருநிறுவனத் தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், இளம் தலைவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தீவிரவாதப் போக்கிற்கு எதிரான பாதுகாப்பில் சமூகம் முக்கியப் பங்களிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் டோங், அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“இதில் சமய, சமூகத் தலைவர்களின் பங்கு அளப்பரியது. சிங்கப்பூரில் சமயப்பற்று அதிகரித்து வருகிறது. சமய நம்பிக்கையில் வலுவான அடித்தளம் இருப்பது நல்லது. ஏனெனில், அதன்மூலம் உலகளாவிய பண்புநலன்கள் வெளிப்படுகின்றன. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று திரு டோங் வலியுறுத்தினார்.

கலந்துரையாடல் அங்கத்திற்கு முன்னர் சிறப்புரையாற்றிய அவர், மேற்கத்திய நாடுகளில் மக்களிடம் பயத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வரும் தீவிர வலதுசாரி இயக்கங்களின் எழுச்சியைப் பற்றிய கருத்துகளையும் முன்வைத்தார்.

“அடையாளம், குடியேற்றம், சமத்துவமின்மை சார்ந்த கவலைகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன. பன்முக இனம், சமயங்களைக் கொண்ட பல கலாசார நாடான சிங்கப்பூரில் இத்தகையப் பிளவுக்கோடுகள் ஏற்கெனவே உள்ளன,” என்று அவர் சொன்னார்.

இத்தகைய விவகாரங்களில் பிளவு ஏற்படுவதால் சில வளர்ந்த ஜனநாயக நாடுகளில் கூட அரசியல் தேக்கநிலை ஏற்படுவதாகக் கூறினார் திரு டோங்.

“இன்றைய மின்னிலக்க யுகத்தில் இணையத்தில் நாம் காணும் போர் தொடர்பான காட்சிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி உடனுக்குடன் கிடைக்கின்றன. அவை நம் ஆழ்மனத்தை உலுக்கி மிகத் தீவிரமான உணர்வுகளைத் தூண்டுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்