ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் (JS-SEZ) அதன் உத்திபூர்வ பெருந்திட்டப் பணிகள் குறித்து இன்னும் சில மாதங்களில் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரவு நிலையங்கள், பகுதி மின்கடத்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் ஊடகச் சங்கமும் ஜோகூர் பொருளியல், சுற்றுலா மற்றும் கலாசார அலுவலகமும் இணைந்து சிங்கப்பூரில் ஏப்ரல் 13 (திங்கட்கிழமை) அன்று கலந்துரையாடலை நடத்தினர்.
உலக அளவில் வர்த்தக நடுவமாக வளர்ந்துள்ள சிங்கப்பூரும் நில, வளம் உள்ள ஜோகூரும் இணைவதால், சிறப்புப் பொருளியல் மண்டலம் தொழில் வளர்ச்சிக்கு உகந்த இடமாக மாறும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்தானது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் உள்ள பொருளியல் நடவடிக்கைகள் எந்தக் குறையும் இல்லாமல் சீராக நடக்கச் சிறப்புப் பொருளியல் மண்டலம் உதவும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் 11 முக்கியத் துறைகளின் வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும். அதனால் உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்று முன்னர் கூறப்பட்டது.
மண்டலத்திற்கான பெருந்திட்டம் மார்ச் மாதம் வெளியாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது சில காரணங்களால் தாமதமானது.
தொடர்புடைய செய்திகள்
இணைப்பு முக்கியம்
சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு முக்கியப் பலமாக ஜோகூர்பாரு-சிங்கப்பூர் ரயில் சேவை (ஆர்டிஎஸ்) பார்க்கப்படுகிறது. அதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடியும் என்றும் அடுத்த ஆண்டு முதல் சேவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆர்டிஎஸ் ரயில் சேவை மூலம் இரு நாடுகளிலிருந்தும் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10,000 பயணிகள் எல்லைகளைக் கடக்க முடியும், இதனால் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு மக்கள் செல்ல எளிதாக இருக்கும்,” என்று கவனிப்பாளர்கள் கலந்துரையாடலில் கூறினர்.
“ஆர்டிஎஸ் ரயில் சேவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செயல்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் அது மேலும் பல முதலீடுகளை ஈர்க்கும்,” என்று நிபுணர்கள் கூறினர்.
வர்த்தகங்கள் பல மின்னிலக்கப் பொருளியலுக்கு ஏற்ப செயல்படுவதால் தரவு நிலையங்களும் பகுதி மின்கடத்தி துறையும் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை அனுக்கமாகக் கவனித்து வருகின்றனர்.

