2025ல் வேலைச் சந்தை விரிவடைந்தது: மனிதவள அமைச்சு

2025ல் வேலைச் சந்தை விரிவடைந்தது: மனிதவள அமைச்சு

2 mins read
25% முதலாளிகள் 2026 முதல் காலாண்டில் ஊதிய உயர்வுக்கு ஆதரவு
c0bfaa7e-b798-4636-9055-baee93a14c13
ஏறத்தாழ 25 விழுக்காட்டு முதலாளிகள் ஊதியத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதை மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 29) வெளியிட்ட முதற்கட்டத் தரவுகள் காட்டுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2025) நான்காம் காலாண்டில் வேலைச் சந்தை தொடர்ந்து விரிவடைந்தது. அதேவேளை வேலையின்மை விகிதமும் ஆட்குறைப்பு விகிதமும் குறைவாகவே பதிவாயின. சென்ற ஆண்டு முழுமைக்கும் இது பொருந்தும்.

வேலைச் சந்தை விரிவாக்கம் இந்த ஆண்டின் முதல் காலாண்டிலும் தொடர்கிறது. சில வேலைகளுக்குத் தகுதியான ஊழியர்கள் கிடைக்காத நிலையிலும், கிட்டத்தட்ட 25 விழுக்காட்டு முதலாளிகள் ஊதியத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளனர்.

மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 29) வெளியிட்ட முதற்கட்டத் தரவுகள் இதனைத் தெரிவித்தன.

2025 டிசம்பரில் அமைச்சு நடத்திய கருத்தாய்வில், 26.4 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. 2025 செப்டம்பரில் அது 19.3 விழுக்காடாகப் பதிவானது.

இது லாபகரமான வர்த்தகத்தையும் குறிப்பிட்ட துறைகளில் வேலைக்குப் போட்டித்தன்மை நிலவுவதையும் காட்டுவதாக அமைச்சு கூறியது.

இந்நிலையில், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு (வேலையில் இருந்த சிங்கப்பூர்வாசிகள், வெளிநாட்டினரின் எண்ணிக்கை) 19,600 அதிகரித்தது. 2025ன் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட 25,100 என்ற அதிகரிப்பு எண்ணிக்கையைவிட அது குறைவு என்றாலும் 2025ன் முற்பாதியில் பதிவானதைவிட அது அதிகம்.

2025ஆம் ஆண்டில் வேலையில் இருந்த சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நிதிச் சேவை, சுகாதாரம், சமூகச் சேவை போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றினர். அதேநேரம், கட்டுமானத் துறையில் வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வேலைபார்த்தனர்.

இதற்கிடையே, சென்ற ஆண்டு முழுவதும் வேலையின்மை விகிதம் ஏற்ற இறக்கமின்றி 2 விழுக்காடாக இருந்தது. அதற்கு முந்தைய ஈராண்டுகளிலும் இதே நிலை நிலவியது நினைவுகூரத்தக்கது.

2025ல் மொத்தம் 14,400 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாயினர். 2024ல் அந்த எண்ணிக்கை 13,020ஆகப் பதிவானது. சென்ற ஆண்டு போக்குவரத்து, நிதிச் சேவை போன்ற துறைகளில் அதிகமானோர் வேலை இழந்தனர்.

நிறுவன மறுவடிவமைப்பே ஆட்குறைப்புக்கு முதன்மைக் காரணம் என்று சென்ற ஆண்டு ஆட்குறைப்பு செய்த நிறுவனங்கள் கூறின.

இந்நிலையில், ஆட்சேர்ப்பில் நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொண்டாலும் வேலைச் சந்தை தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்