அதிவேகமாக காரைச் செலுத்தி மரணம் விளைவித்த மாதுக்கு 30 மாதச் சிறை

அதிவேகமாக காரைச் செலுத்தி மரணம் விளைவித்த மாதுக்கு 30 மாதச் சிறை

2 mins read
33d7aeec-4315-483c-835e-d20075bcf3f4
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

தீவு விரைவுச் சாலையில் 2021ஆம் ஆண்டு அதிவேகமாக காரைச் செலுத்தி, ஐந்து வாகனங்கள் தொடர்பான விபத்தை ஏற்படுத்திய மாதுக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்து வெளியான நாள் முதல் பத்தாண்டுகள் அவர் எந்த விதமான வாகனத்தையும் ஓட்ட இயலாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

35 வயதாகும் இங் வென் ஸுன், 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இரவு 9.20 மணியளவில், தனது காரை மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தினார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது.

அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய 31 வயது ஆடவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

இங்கின் கார் பிறகு மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், லாரி, கார் ஆகியவற்றுடன் மோதியது.

இரண்டாவது மோட்டார் சைக்கிளை ஓட்டியவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

லாரி அதன் வலப்பக்கம் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பங்ளாதேஷைச் சேர்ந்த இருவர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

அதன் பிறகு இங்கின் கார் சாலைத் தடுப்பை மோதி நின்றது. உடனே தீப்பிடித்தது.

விபத்தை அடுத்து முதல் மோட்டார் சைக்கிளோட்டி சுய நினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பங்ளாதேஷ் ஆடவர்களில் ஒருவருக்கு இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்பட பல காயங்கள் ஏற்பட்டன. மற்றவருக்கு முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இரண்டாவது மோட்டார் சைக்கிளோட்டிக்குக் கையில் காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இங் நேற்று $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்த மாதம் 12ஆம் தேதி அவர் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கைதுசிறைசிங்கப்பூர்விபத்து