தந்தைமீது மீண்டும் தாக்குதல்; மகனுக்கு மீண்டும் சிறை

தந்தைமீது மீண்டும் தாக்குதல்; மகனுக்கு மீண்டும் சிறை

2 mins read
a6f622d2-f232-41cf-88e1-df5d7adb4333
தந்தையைத் தாக்கிய குற்றத்திற்காக சிறை சென்றுவந்த மகன், மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்துள்ள நிலையில் ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சபே
Google News Preferred Icon

தந்தையைத் தாக்கிய குற்றத்திற்காக 29 வயது தாம் குவான் ஹுய், 2021 ஜூலை மாதம் சிறைக்குச் சென்ற நிலையில், மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்ததற்காக செவ்வாய்க்கிழமையன்று தாமுக்கு 14 மாதங்களும் 10 வாரங்களும் சிறைத்தண்டனையாக விதிக்கப்பட்டது.

தாக்குதல், திருட்டு உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை ஹுய் ஒப்புக்கொண்டதை அடுத்து தண்டனை விதிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தந்தைக்கு எதிராக மகன் வன்முறையைக் கையாள்வதற்குத் தடைவிதிக்கும் வகையில் மாவட்ட நீதிபதி தனிநபர் பாதுகாப்பு ஆணையைப் பிறப்பித்திருந்தார்.

இருப்பினும், 2021ல் தம் தந்தையை ஹுய் உதைத்ததுடன் மூச்சுத்திணறத் தாக்கியதாக அறியப்படுகிறது.

இத்தாக்குதலை அடுத்து ஹுய்க்கு கடந்த ஆண்டு ஏழு வாரச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

சிறைத் தண்டனையை நிறைவேற்றிய ஹுய், பேரங்காடி ஒன்றில் $12 மதிப்பிலான மளிகைப் பொருள்களைத் திருடியதன் தொடர்பில் மீண்டும் கைதானார்.

மறுநாள் பிணையில் விடுதலையான ஹுய், பின்னர் 2022 அக்டோபர் 8ஆம் தேதியன்று தந்தையுடன் வீட்டில் இருந்தபோது மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.

ரொட்டித் துண்டுகளை வைப்பதற்காக தந்தை பயன்படுத்திய தட்டு மிகப் பெரிதாக இருந்த காரணத்தால் தாம் எரிச்சலடைந்ததாகவும் இருவருக்கும் சண்டை மூண்டதாகவும் கூறப்படுகிறது.

தந்தையை மூச்சுத்திணறத் தாக்கியதுடன் அங்கிருந்து செல்ல முயன்ற பெரியவரைப் பிடித்துக் கீழே தள்ளி, அவர் மீது எச்சில் உமிழ்ந்து சண்டைக்கு வருமாறு மகன் சவால் விட்டதாகத் தெரியவந்தது.

இத்துடன் வேறு ஒரு சம்பவத்தில் 23 வயது மாது ஒருவருடன் தாம் சண்டை போட்டதாகவும் மாதின் கைப்பேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு அவரின் வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்