போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட எச்ஐவி நோயாளி ஒருவர் மருத்துவமனையில் துணைக் காவல்படை அதிகாரி ஒருவரின் கையைக் கடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களுடன் போராடியபோது அந்தச் சம்பவம் நடந்தது.
முழுக்கைச் சட்டை அணிந்திருந்த அந்த அதிகாரிக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
41 வயதான அந்த எச்ஐவி நோயாளிக்கு செவ்வாய்க்கிழமையன்று ஏழு ஆண்டுகள் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதிகாரியைக் கடித்ததற்காக விதிக்கப்பட்ட ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் அதில் அடங்கும்.
அவர் ஏழு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். அரசாங்க அதிகாரியை வேலை செய்யவிடாமல் இருக்க அவரைக் காயப்படுத்தியது, போதைப்பொருள் வைத்திருந்தது, போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட குற்றங்கள் அவற்றில் அடங்கும்.
தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் 14 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.


