சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தில் சீனச் சமூகம் அதன் பண்பாட்டு அடையாளத்தை வேரூன்றச் செய்வது முக்கியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியிருக்கிறார்.
அத்துடன் நாட்டின் பொதுக் கொள்கைகளுக்கும் எதிர்கால இலக்குகளுக்கும் ஏற்ப அந்த அடையாளம் அமைந்திருக்க வேண்டும் என்றார் அவர். உலக நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் நிச்சயமற்ற சூழலும் நிலவும் வேளையில் திரு கானின் கருத்து வந்துள்ளது.
சிங்கப்பூரில் சமூகத்தின் பங்கு என்பது கலாசார நடவடிக்கைகளுடனோ குலமரபுச் சங்கங்களை நிறுவுவதுடனோ நின்றுவிடுவதில்லை; அவற்றுக்கும் அப்பால் சென்று, சிங்கப்பூரர்கள் விரும்பும் சமுதாயத்தையும் விழுமியங்களையும் அது உருவாக்க வேண்டும் என்றார் திரு கான்.
சிங்கப்பூர்ச் சீனக் குலமரபுச் சங்கங்கள் சம்மேளனமும் சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வசந்தகால வரவேற்பு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) அவர் பேசினார்.
சிங்கப்பூர்ச் சமுதாயத்தில் பின்னிப் பிணைந்த அங்கமாகச் சீனச் சமூகம் எப்போதும் உருவாக்கப்பட்டு வந்துள்ளதைத் திரு கான் சுட்டினார்.
நீண்டகாலமாகவே அந்தச் சமூகம், பிணைப்புகளை ஏற்படுத்திச் சமுதாயத்திற்கு உதவிக்கரம் நீட்டிவருகிறது. கலாசாரத்தைப் பேணிவளர்ப்பதற்கு அப்பால் சமுதாயப் பிணைப்பையும் மீள்திறனையும் வலுப்படுத்துவதிலும் அது கவனம் செலுத்துகிறது என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
2017ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்தே நிலையம், தனித்துவமான சிங்கப்பூர்ச் சீனக் கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது.
கலாசாரம் என்பது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஒன்றாக இல்லாமல் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்றார் திரு கான். மலாய் மரபுடைமை நிலையம், இந்திய மரபுடைமை நிலையம், பாஸ்கர் கலைக் கழகம் ஆகியவற்றுடன் சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையம் இணைந்து பணியாற்றியது அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையத்தின் முயற்சிகள் பலன் தந்திருக்கின்றன என்பது 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்திருப்பதாகத் திரு கான் குறிப்பிட்டார். அதில் பங்கெடுத்தோரில் 75 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் சிங்கப்பூர்ச் சீனக் கலாசாரம் மற்ற சீனக் கலாசாரங்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது என்று தெரிவித்ததை அவர் சுட்டினார்.
உள்ளூர்க் கலாசார அடையாளத்தில் பெருகும் நம்பிக்கையை அது பிரதிபலிப்பதாகவும் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதைக் காட்டுவதாகவும் துணைப் பிரதமர் கான் கூறினார்.
நிலையம் வருங்காலத்தில், உள்ளூர்வாசிகளுக்கும் புதிய குடிமக்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தும் பெருமுயற்சியில் ஈடுபடும் என்றார் அவர்.

