ஈஸ்வரன் ஆதாரங்களை அழிக்கவில்லை: தவிந்தர் சிங்

3 mins read
9a223a2a-2fcf-4b9f-8d31-eaaeb50d3e15
தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டாலும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு அவர் எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று திரு தவிந்தர் சிங் வாதிட்டார். - படம்: இபிஏ

நீதிமன்றத்தில் துணை தலைமைச் சட்ட அதிகாரி (டிஏஜி) டாய் வெய் ஷியோங், வழக்கின் அறிக்கையை வாசித்தார்.

உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண திரு ஓங் பெங் செங்கிற்கு அப்போட்டியின் தலைவர் அழைப்பு விடுத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டோஹாவுக்குப் பயணம் மேற்கொள்ள 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று ஈஸ்வரனுக்குத் திரு ஓங் அழைப்பு விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அழைப்பை ஏற்று, ஈஸ்வரன் அவசர விடுப்பு எடுத்துக்கொண்டார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதிக்குள் தாம் சிங்கப்பூர் திரும்பிவிட வேண்டும் என்று திரு ஓங்கிடம் ஈஸ்வரன் கூறியதாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டோஹாவில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் ஈஸ்வரன் தங்கினார்.

அந்த ஹோட்டலின் ஒருநாள் கட்டணம் $4,000க்கும் அதிகம் என்றும் அதற்கான செலவை சிங்கப்பூர் எஃப் 1 ஏற்றுக்கொண்டதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்குத் தேவையான ஏற்பாட்டை திரு ஓங் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 11ஆம் தேதியன்று டோஹாவிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தின் வர்த்தகப் பிரிவில் பயணம் செய்த ஈஸ்வரன், அதற்கான $5,700 தொகையை சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்திடம் 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர் காசோலை மூலம் திருப்பிக் கொடுத்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

இது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது என்று தெரிந்து ஈஸ்வரன் அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.

உலகளாவிய நிகழ்வை டோஹா எவ்வாறு நடத்துகிறது என்பதை அறிந்துகொள்ள அப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதி ஈஸ்வரன் டோஹா சென்றதாகத் திரு சிங் கூறினார்.

அதற்கு முன்பே தனியார் விமானத்தில் பயணம் செய்ய திரு ஓங் ஏற்பாடு செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

எனவே, கத்தார் தலைநகர் டோஹாவுக்கு ஈஸ்வரன் தனியார் விமானத்தில் சென்றதன் மூலம் கூடுதல் செலவு ஏற்படவில்லை என்று திரு சிங் கூறினார்.

தனியார் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும், டோஹாவில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்க வேண்டும் என்று ஈஸ்வரன் நிபந்தனை விதிக்கவில்லை என்றார் திரு சிங்.

ஈஸ்வரன் ஆதாரங்களை அழிக்கவில்லை என்றார் திரு சிங். பொய் கூறவோ குறுஞ்செய்திகளை நீக்கவோ ஈஸ்வரன் யாரையும் பணிக்கவில்லை என்று அவர் கூறினார்.

அன்பளிப்புகளைப் பெற்ற விவகாரம், பணத்தின் மீதான பேராசை பற்றியது அல்ல என ஆணித்தரமாகக் கூறிய திரு சிங், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் பற்பல திட்டங்களின்மூலம் வசதி குறைந்தோருக்கு திரு ஈஸ்வரன் பேருதவி செய்திருப்பதையும் சுட்டினார்.

தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் ஈஸ்வரன் அவராகவே முன்வந்து, அமைச்சர் என்கிற முறையில் தாம் பெற்ற சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் பெற்ற படித்தொகையையும் திருப்பிக் கொடுத்ததைத் திரு சிங் சுட்டினார்.

“தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டாலும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு அவர் எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குற்றச்சாட்டுகளின் தன்மை குறைக்கப்பட்டுள்ளதே இதற்குச் சான்று,” என்று திரு சிங் வாதிட்டார்.

பெற்ற அன்பளிப்புகளை ஈஸ்வரன் மறைக்காததை மேலும் வலியுறுத்திய திரு சிங், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஈஸ்வரன் வெளிப்படையாகத் தாம் பெற்றதைத் தெரிவித்தார்.

“எனவே அவர் செய்தது அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவில்லை. பொதுமக்களுக்குத் தெரிந்த பிறகு திரு ஈஸ்வரன் விசாரிக்கப்பட்டால், அவர் செய்தது அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும்,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவை திருத்தப்பட்டுள்ளன என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஈஸ்வரனின் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் ஆறு முதல் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்குமாறு அரசுத் தரப்பு கோரியது. இதைத் திரு சிங் ஏற்க மறுத்தார்.

ஈஸ்வரனுக்கு அதிகபட்சம் 8 வாரச் சிறை விதிக்கப்பட வேண்டும் என்று திரு சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டது தவறு என்று திரு ஈஸ்வரன் உணர்ந்துவிட்டதாகத் திரு சிங் தெரிவித்தார்.

கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்

குறிப்புச் சொற்கள்