தீவு முழுவதும் சூதாட்டச் சோதனை: 17 பேர் கைது, $720,000 பறிமுதல்

தீவு முழுவதும் சூதாட்டச் சோதனை: 17 பேர் கைது, $720,000 பறிமுதல்

2 mins read
51632d91-a90b-41f5-898a-a7b24b1dcc81
சட்ட விரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் பிடிபட்டோரில் 14 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் ஆண்கள், மூவர் பெண்கள். பிடிபட்டோர், 45க்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவுப் பிரிவு, சிறப்புச் செயலாக்கத் தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் தீவு தழுவிய அளவில் திங்கட்கிழமை (ஜூலை 6) அதிரடிச் சோதனைகளை நடத்தினர். ஈசூன், அங் மோ கியோ, தோ பாயோ, பொத்தோங் பாசிர், சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், ஜூ சியாட், தெம்பனிஸ், காக்கி புக்கிட், வெஸ்ட் கோஸ்ட், புக்கிட் பாத்தோக், சுவா சூ காங் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின்போது, $720,000க்கும் அதிகமான ரொக்கம், கைப்பேசிகள், கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள், சூதாட்டம் தொடர்பான துணைப் பொருள்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 47க்கும் 76 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆண்களும் 47 வயதுடைய ஒரு பெண்ணும் சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2022இன்கீழ் நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 8) குற்றஞ்சாட்டப்பட்டனர். மற்றவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கடுமையான தண்டனைகள் சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2022இன்கீழ் பின்வரும் தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்:

சூதாட்டக்கூட உதவியாளர் / நடத்துநர்: சட்டவிரோதப் பந்தய நடவடிக்கைகளை நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் $500,000 அபராதமும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

விற்பனை முகவர்: முகவராகச் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் $200,000 அபராதமும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

சூதாட்டக்காரர்: சட்டவிரோதச் சூதாட்டச் சேவை வழங்குநரிடம் சூதாடுபவருக்கு அதிகபட்சம் $10,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

உலகக் கிண்ணக் காற்பந்து போன்ற முக்கிய அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகளின்போது சட்டவிரோதப் பந்தய நடவடிக்கைகள் அதிகரிப்பதாகக் காவல்துறை கூறியது. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் அல்லது லாபம் ஈட்டுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் இத்தகைய சூதாட்டங்களிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சூதாட்டத்திற்கு அடிமையானோர் உதவி தேவைப்பட்டால் சூதாட்டப் பிரச்சினை குறித்த தேசிய மன்றத்தைத் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்: 1800-6-668-668.

குறிப்புச் சொற்கள்