ஈரான் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடுவதாக அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை (ஜனவரி 14) அறிவித்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ராணுவத் தாக்குதல் ஏற்படும் அபாயம் இருப்பதால் ஈரான் இந்த முடிவை எடுத்திருந்தது.
ஆனால், ஏறத்தாழ ஐந்து மணி நேரம் கழித்து ஈரான் அதன் வான்வெளியை மீண்டும் விமானங்களுக்குத் திறந்துவிட்டது.
இருப்பினும், ஈரானிய வான்வெளி மூடப்பட்டதாகச் செய்தி வெளியானதும் சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமையன்று (ஜனவரி 15) ஸ்கூட் அதன் இரண்டு விமானச் சேவைகளை ரத்து செய்தது.
சிங்கப்பூரிலிருந்து சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்குச் செல்லும் டிஆர்596 விமானச் சேவையும் ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் டிஆர்597 விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்கூட்டின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
“ஈரானிய வான்வெளியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் பறப்பதில்லை. எங்கள் பயணிகள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருகிறோம். மத்திய கிழக்கு நிலவரத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும். தேவை ஏற்பட்டால் பயணப் பாதைகள் மாற்றியமைக்கப்படும்,” என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

