ஈரான் போர் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீதான தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் உதவும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை என்றபோதிலும், முன்கூட்டியே உதவி வழங்குவதற்காக தற்போதுள்ள ஆதரவு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படலாம் அல்லது முன்கூட்டியே கொண்டுவரப்படலாம் என்றும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது அமைச்சர்கள் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு துறைகளிலும் அதிகரிக்கும் எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகளின் தாக்கம் சீரற்றதாக இருப்பதால், அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு கூடுதல் நடவடிக்கையும் குறிப்பிட்ட இலக்கைக் கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது என்று தொழில்துறை பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் மற்றும் சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை ஆகியவை தாங்கள் கோரும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
இருப்பினும், மிகவும் திறந்த மற்றும் வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் பொருளியல் என்பதால், அதிக தளவாடச் செலவுகள், எரிசக்தி விலை ஏற்ற இறக்கம் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்றவற்றின் மூலம் சிங்கப்பூர் இத்தகைய அதிர்ச்சிகளை விரைவாக உணர்கிறது என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் எரிசக்திச் செலவுகளுக்கு அப்பால், சிங்கப்பூர் தனது உணவுத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதாலும் உரங்களின் விலை அதிகரித்துள்ளதாலும் உணவு விலைகளும் உயர உள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (ஏப்ரல் 4) தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழுவின் தலைவராகத் தனது முதல் தகவலை வழங்கிய திரு. சண்முகம், இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது இந்தக் குழுவின் முயற்சிகள் குறித்து மேலும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறினார்.

