ஈரான் போரால் செலவு அதிகரிப்பு: ஆட்சேர்ப்பைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள்

ஈரான் போரால் செலவு அதிகரிப்பு: ஆட்சேர்ப்பைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள்

2 mins read
c18cc548-b896-459d-bbdb-2fc6645bb505
சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதி. - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் சில, புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் மிகவும் நிதானமான அணுகுமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

ஈரான் போர் காரணமாக செலவுகளில் ஏற்பட்டுள்ள சவால்களே அதற்குக் காரணம். எனினும், வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கில் உள்ள மாற்றங்களை அதிகாரபூர்வ ஊழியர் சந்தை புள்ளிவிவரங்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை.

வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு தற்போது பொதுவாக சீராக இருப்பதாக பிஸ்னஸ் டைம்சிடம் பேசிய வேலை நியமன நிறுவனங்களும் தளங்களும் தெரிவித்தன. அதேவேளை, சில நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் வேலைக்கு எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் வால்டர்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர்ப் பிரிவுத் தலைவரான கர்ஸ்டி பொல்டோக், அந்நிறுவனத்தின் வேலைக்கு எடுக்கும் போக்கில் மாற்றம் இல்லை என்றாலும் அரசியல் ரீதியான வட்டாரப் பிரச்சினைகள் காரணமாக சிறிதளவு தயக்கம் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அதனால் ஆக்ககரமாகச் செயல்படுவது, செலவு தொடர்பான அம்சங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நிறுவனங்கள் இயங்குவதாக அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) மனிதவள அமைச்சு அதன் ஊழியர்ச் சந்தை, வேலை வாய்ப்பு அறிக்கைகளை வெளியிட்டது. அவை பெரும்பாலும் சென்ற ஆண்டு நிலவரத்தையே பிரதிபலித்தன.

அதுகுறித்துப் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், இறுக்கத்தில் உள்ள சிங்கப்பூரின் ஊழியர் சந்தை இன்னும் வளர்ந்து வருவதாகக் கூறியிருந்தார். எனினும், மத்திய கிழக்குப் பூசலால் மின்சார, வர்த்தகச் செலவுகள் மீது நெருக்குதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதன் காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட பொருளியல்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

உலக வர்த்தகக் கட்டமைப்புக்குச் சம்பந்தமற்ற, உள்ளூரில் இயங்கும் நிறுவனங்களும் அதிகரித்துவரும் செலவுகளால் பாதிக்கப்படுகின்றன.

அட்டோமி அறைகலன் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ஆண்ட்ரு டான், மத்திய கிழக்குப் பூசல் தொடங்கியதிலிருந்து தங்களின் செயல்பாட்டுச் செலவுகள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு கூடியுள்ளதாகத் தெரிவித்தார். பெரிய பொருள்களைத் தருவிப்பதற்கான செலவு அதிகரித்திருப்பது அதற்கு முக்கியக் காரணம்.

அதனால் சிங்கப்பூரில் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் அந்நிறுவனத்தின் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு டான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்செலவுமத்திய கிழக்குவர்த்தகம்